முக்கிய செய்திகள்:
பெருமளவு ஊழல் நடைபெற்ற ரூ.3,600 கோடி இத்தாலி ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை ரத்துசெய்ய மத்திய அரசு திடீர் முடிவு

ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஹிமாலய ஊழல் - ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் நிலக்கரிச் சுரங்க முறைகேடு - டெல்லி, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் என தொடரும் ஊழல்களால் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு தோல்வி பயம் அதிகரித்து வருகிறது. நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தோல்வி பயம் காரணமாக, 3,600 கோடி ரூபாய் இத்தாலி ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை ரத்துசெய்ய மத்திய அரசு திடீரென முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்காக ஆங்கிலோ-இத்தாலிய நிறுவனமான அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடமிருந்து நவீன ஹெலிகாப்டர்களை வாங்க மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு ஒப்பந்தம் செய்தது. இதுதொடர்பான 3,600 கோடி ரூபாய் பேரத்தில், பெருமளவு ஊழல் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பான வழக்கு விசாரணை இத்தாலி நாட்டின் மிலன் நகர நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை ரத்து செய்ய மத்திய அரசு திடீரென முடிவு செய்துள்ளதாகவும், இதுதொடர்பாக, மத்திய பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் மற்றும் அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் இடையேயான கூட்டம் நாளை நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல், டெல்லி காமன்வெல்த் விளையாட்டு ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழல்களால் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி பயம் அதிகரித்து வருகிறது. இதனால், இந்த திடீர் முடிவை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்திற்குப் பதிலாக, United Technologies Corp's Sikorsky Aircraft, EADS Eurocopter மற்றும் Lockheed Martin ஆகிய நிறுவனங்களுடன் புதிதாக ஒப்பந்தம் செய்துகொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்