முக்கிய செய்திகள்:
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய ஏவப்பட்ட மங்கள்யான் விண்கலம் - செவ்வாய் கிரகத்தை நோக்கி ஒன்றாம் தேதி பயணத்தை தொடங்கும் என இஸ்ரோ அறிவிப்பு

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பியுள்ள மங்கள்யான் விண்கலம், செவ்வாய் கிரகத்தை நோக்கி தனது பயணத்தை வரும் ஒன்றாம் தேதி தொடங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழத்தக்க சாத்திய கூறுகள் உள்ளனவா? என்பதை ஆராய்வதற்காக, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மங்கள்யான் விண்கலம், பி.எஸ்.எல்.வி. சி-25 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. புவி நீள் வட்டப்பாதையில் சுற்றி வரும் மங்கள்யானின் உயரம், படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, தற்போது அந்த விண்கலம், பூமியிலிருந்து ஒரு லட்சத்து 93 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ நிறுவனத்தின் தலைவர் திரு. ராதாகிருஷ்ணன், மங்கள்யான் விண்கலம் சிறப்பாக செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். புவி வட்டப்பாதையில் இருந்து பிரிந்து இந்த விண்கலம் செவ்வாய் கிரகம் நோக்கி தனது பயணத்தை வரும் ஒன்றாம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக திரு. ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார். ஜிஎஸ்எல்வி டி5 ராக்கெட்டை வடிவமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் திரு. ராதாகிருஷ்ணன் மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்