முக்கிய செய்திகள்:
சத்தீஷ்கர் மாநில சட்டப்பேரவைக்கான 2-ம் கட்ட தேர்தல் - பதற்றம் நிறைந்த பகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு

பலத்த பாதுகாப்புக்கு இடையே சத்தீஸ்கர் மாநில சட்டபேரவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.

சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவையில், மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் முதற்கட்டமாக 18 தொகுதிகளுக்கு கடந்த 11ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 75 சதவீத வாக்குகள் பதிவாகின. இதனைத்தொடர்ந்து, 19 மாவட்டங்களை உள்ளடக்கிய எஞ்சிய 72 தொகுதிகளுக்கு, இரண்டாம் கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்தத் தொகுதிகளில் மொத்தம் 843 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில், 9 அமைச்சர்கள் மற்றும் சத்தீஸ்கர் சட்டப்பேரவை சபாநாயகர் உள்ளிட்டோர்களின் தொகுதிகளும் அடங்கும். காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

18,015 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. தேர்தலை கண்காணிக்க 3 ஆயிரம் வீடியோ கேமராக்கள் வாக்குச்சாவடிகளில் பொருத்தப்பட்டுள்ளன. சுமார் 80 ஆயிரம் அதிகாரிகள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் பாதுகாப்புப் பணியில் மாநில போலீசார், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் உட்பட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதற்றம் மிகுந்த பகுதிகளாக 4,594 வாக்குச்சாவடிகளும், மிகவும் பதற்றமான இடங்களாக 1,398 வாக்குச்சாவடிகளும் கண்டறியப்பட்டுள்ளன. மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு குவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்