முக்கிய செய்திகள்:
பாட்னா, புத்தகயா தொடர் வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் - சிமி தீவிரவாதிகள் 8 பேர், சத்தீஸ்கர் மாநிலத்தில் கைது

பாட்னா மற்றும் புத்தகயா தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில் தொடர்புடைய, சிமி தீவிரவாதிகள் 8 பேர், சத்தீஸ்கர் மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பீஹார் மாநிலம் புத்தகயா மற்றும் பாட்னாவில் நிகழ்ந்த தொடர் வெடிகுண்டு சம்பவங்கள் தொடர்பாக, தேசிய புலனாய்வு துறையினர் பலரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாட்னா தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில், இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சிலர், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, ராய்ப்பூரில் பயிற்சி வகுப்பு நடத்தி வரும் உமர் சித்திக்கி மற்றும் ஆட்டோ ஓட்டுநர் அப்துல் வாஹித்கான் ஆகியோரின் செல்ஃபோன் உரையாடல்களை கண்காணித்த காவல்துறையினர், அவர்களுக்கு புத்தகயா மற்றும் பாட்னா குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்து கைது செய்தனர். உமர் சித்திக்கி அளித்த தகவலின்படி, மேலும் 6 பேரை கைது செய்த சத்தீஸ்கர் காவல்துறையினர், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, உமர் சித்திக்கி, அப்துல் வாஹித்கான் உள்ளிட்ட 8 பேரும் சிமி அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் என்பது தெரியவந்ததாக, காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்