முக்கிய செய்திகள்:
கிரிக்கெட் வீரர் டெண்டுல்கருக்கு பாரத் ரத்னா விருது - மத்திய அரசின் அறிவிப்புக்கு சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பு

கிரிக்கெட் வீரர் டெண்டுல்கருக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கிரிக்கெட் விளையாட்டின் சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கருக்கு, நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கிரிக்கெட்டில் இருந்து டெண்டுல்கர் ஓய்வுபெற்ற அதேநாளில் வெளியான இந்த அறிவிப்பு, டெண்டுல்கரின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஆனால், தற்போது இந்த அறிவிப்பு விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. டெண்டுல்கருக்கு விளையாட்டு பிரிவில், ஏற்கனவே பத்மவிபூஷன் விருது வழங்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது பாரத் ரத்னா விருது தேவையில்லை என தகவல் அறியும் ஆர்வலரான திரு.சுபாஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இதேபோல், ஐக்கிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த எம்.பி. திரு.சிவனாந்த் திவாரியும், டெண்டுல்கருக்கு விருது வழங்கப்படுவதை விமர்சித்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டை கார்ப்பரேட் நிறுவனங்கள் கைவசப்படுத்தி, கொள்ளை லாபம் ஈட்டும் நிலையில் கிரிக்கெட் வீரர்களுக்கு கவுரவம் ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் திரு.அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு பாரத் ரத்னா விருது வழங்கவேண்டும் என்ற அக்கட்சியின் கோரிக்கையை ஏற்கவேண்டும் என மத்திய அமைச்சர் திரு.ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார். பல்வேறு அமைப்பினரின் விமர்சனம், டெண்டுல்கரின் ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்