முக்கிய செய்திகள்:
சத்தீஸ்கர் மாநில சட்டமன்றத்திற்கு நாளை இரண்டாம் கட்ட தேர்தல் - 72 தொகுதிகளில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடு

சத்தீஸ்கர் மாநில சட்டமன்றத்திற்கு நாளை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதையொட்டி, நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தது. மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் தேர்தல் புறக்கணிப்பு எச்சரிக்கையால், 72 தொகுதிகளில் மாநில போலீசார், துணை ராணுவப் படை உள்பட சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சத்தீஸ்கர் மாநில சட்டமன்றத்திற்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்ததையடுத்து, கடந்த 11ம் தேதி 18 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலை பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும் என மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்திருந்ததை முன்னிட்டு, பாதுகாப்பு பணியில் உள்ளூர் போலீசாருடன், துணை ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் உள்பட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இருப்பினும், மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் திடீர் தாக்குதல்களில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரில் சிலர் படுகாயமடைந்தனர்.

இதனையடுத்து, இரண்டாம் கட்ட மற்றும் இறுதி தேர்தல் நாளை நடைபெறுவதையொட்டி, எஞ்சியுள்ள 72 தொகுதிகளுக்குட்பட்ட 18,015 வாக்குச்சாவடிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீரர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதற்றம் நிறைந்ததாக கண்டறியப்பட்டுள்ள 4,594 வாக்குச்சாவடிகள் மற்றும் அதிகளவு பதற்றம் நிறைந்த பகுதிகளில் உள்ள 1,398 வாக்குச்சாவடிகளிலும் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்ததால், பாரதிய ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களில் பதிவான வாக்குகள் வரும் 8ம் தேதி எண்ணப்பட்டு, அன்றே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

மேலும் செய்திகள்