முக்கிய செய்திகள்:
ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாதிகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம் - பாகிஸ்தான் திட்டவட்ட அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாதிகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கப்போவதாக, பாகிஸ்தான் உறுதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜம்மு-காஷ்மீரில் சையத் அலி ஷா ஜிலானி தலைமையில் செயல்படும் பிரிவினைவாத ஹுரியத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸை அண்மையில் சந்தித்து பேசினர். காஷ்மீர் விவகாரத்தில் தங்களின் நிலைப்பாட்டிற்கு பாகிஸ்தான் அரசியல் ரீதியாகவும், தூதரக ரீதியாகவும் ஆதரவு அளிக்க வேண்டும் என அப்போது வலியுறுத்தினர். அவர்களுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றும், காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண நவாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு தீவிரம் காட்டி வருவதாகவும், பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் உறுதியளித்தாக ஹுரியத் செய்தித் தொடர்பாளர் அயாஸ் அக்பர் இன்று செய்தியாளரிடம் தெரிவித்தார். 1947 ஆம் வருட ஐ.நா. தீர்மானத்தின்படி, எதிர்காலத்தை தீர்மானிக்க ஜம்மு-காஷ்மீர் மாநில மக்களை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும், அயாஸ் அக்பர் குறிப்பிட்டார். அண்மைக்காலமாக எல்லைப்பகுதியில் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில், பிரிவினைவாதிகளுக்கு ஆதரவளிப்போம் என பாகிஸ்தான் பகிரங்கமாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்