முக்கிய செய்திகள்:
பீஹாரில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகப் பரவிய வதந்தி காரணமாக, ஒரு கிலோ உப்பு ரூ.200 வரை விற்பனை

பீஹாரில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகப் பரவிய வதந்தி காரணமாக, ஒரு கிலோ உப்பு 200 ரூபாய் வரை விற்பனையானது. கடைகளின் முன் வரிசைகளில் காத்திருந்தும் உப்பு கிடைக்காததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், கலவரத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, உப்பை பதுக்கி வைத்திருந்த 3 வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.

பீஹார் மாநிலத்தின் வடமாவட்டங்களில், வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பொருட்களுக்கு பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், தற்போது உப்புக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, திடீரென வதந்தி நிலவியத்தை அடுத்து, கடைகளின் முன் மக்கள் திரண்டனர். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட கடைக்காரர்கள், 200 ரூபாய் வரை அதிக விலைக்கு விற்றனர். சமஸ்திபூர், வைசாலி உள்ளிட்ட பல ஊர்களில் உப்பு வாங்குவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் நின்றபோதும், உப்பு மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு, இருப்பு இல்லையென அறிவிப்பு பலகைகள் கடைகளின் வெளியே தொங்கவிடப்பட்டிருந்தன. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், சில இடங்களில் கலவரங்களில் ஈடுபட்டனர்.

பீஹார் மாநில அரசு, உப்பு மூட்டைகளை பதுக்கி வைத்திருக்கும் கடைகளைக் கண்டறிந்து, அவற்றை உடனடியாக கைப்பற்றுமாறு உத்தரவிட்டது. இதையடுத்து, நடவடிக்கையில் ஈடுபட்ட உள்ளாட்சி அமைப்பினர், பெரும்பாலான கடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த உப்பு மூட்டைகளை கைப்பற்றினர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில உணவு மற்றும் நுகர்வுப்பொருள் துறை அமைச்சர் திரு. ஷ்யாம் ரசாக், போதுமான அளவுக்கு உப்பு இருப்பில் இருப்பதாகவும், இதுகுறித்த வதந்திகளை மக்கள் நம்பவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும் செய்திகள்