முக்கிய செய்திகள்:
மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.க்கு எச்சரிக்கை விடுத்ததன் மூலம், பிரதமர் மற்றும் மத்திய நிதி அமைச்சர் ஆகியோர் எல்லை மீறியுள்ளதாக பாரதிய ஜனதா குற்றச்சாட்டு

மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.க்கு எச்சரிக்கை விடுத்ததன் மூலம், பிரதமரும், மத்திய அமைச்சர் சிதம்பரமும் எல்லை மீறியுள்ளதாக பாரதிய ஜனதா குற்றம் சாட்டியுள்ளது. பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, இதன் மூலம் தங்கள் தவறுக‌ளை மறைக்க வெளிப்படையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

டெல்லியில், கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற சி.பி.ஐ. மாநாட்டின்போது பேசிய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், மத்திய அரசின் கொள்கை முடிவுகள் குறித்து புலனாய்வு அமைப்புகள் கேள்வி எழுப்பக்கூடாது என்றார். அதே மாநாட்டிலும், பின்னர் செய்தியாளர்களிடமும் பேசிய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், மத்திய அரசின் மீதான விசாரணைகளில் ஈடுபடும்போது, அதிக ஆர்வத்தின் காரணமாக எல்லை மீறக்கூடாது என்று எச்சரிக்கை விடும் தொனியில் பேசினர். இது குறித்து, ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் திரு. எம். வெங்கய்யா நாயுடு, மத்தியப் புலனாய்வு அமைப்பை ஊக்கம் இழக்கச் செய்யும் வகையில் பேசிய பிரதமர் மற்றும் நிதி அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்தார்.

மத்திய அரசின் மீதான 2 ஜி அலைக்கற்றை ஊழல், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் உள்ளிட்ட இமாலய ஊழல்கள் குறித்து, மத்தியப் புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்திவரும் தற்போதைய சூழ்நிலையில், பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ள இந்த கருத்துகள், மத்தியப் புலனாய்வு அமைப்பின் விசாரணையில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில் வெளியிட்ட எச்சரிக்கையே என்று திரு. வெங்கய்யா நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள மத்திய அரசு, இதன் மூலம் தங்கள் தவறுகளை மறைக்க வெளிப்படையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் திரு. வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்