முக்கிய செய்திகள்:
மங்களா எக்ஸ்பிரஸ் நாசிக் அருகே தடம்புரண்டது - 2 பேர் பலி, 37-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

டெல்லியில் இருந்து எர்ணாகுளம் நோக்கி சென்றுகொண்டிருந்த மங்களா எக்ஸ்பிரஸ் இன்று காலை, நாசிக் அருகில் தடம்புரண்டது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். 37-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

டெல்லி நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் இருந்து எர்ணாகுளம் நோக்கி சென்றுகொண்டிருந்த மங்களா எக்ஸ்பிரஸ் ரயிலின் 10 பெட்டிகள் இன்று அதிகாலை 6.20 மணி அளவில் மகாராஷ்ட்ர மாநிலத்தில் உள்ள கட்புரிக்கும் நாசிக்குக்கும் இடையே தடம் புரண்டது. இதில், சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 37-க்கும் மேற்பட்ட பயணிகள், நாசிக் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், விபத்தை நேரில் பார்த்த உள்ளூர் வாசிகள், 25-க்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கியிருக்கலாம் என தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக, உயிரிழப்பு உயரும் என அஞ்சப்படுகிறது. ரயில் தடம்புரண்டதன் காரணமாக, மன்மத்-குர்லா-கோதாவரி எக்ஸ்பிரஸ், மன்மத்-மும்பை பஞ்சாவதி எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சேவாகரம் எக்ஸ்பிரஸ் மற்றும் ராஜ்ய ராணி எக்ஸ்பிரஸ் ரயில்கள் வசால்கோன் ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

விபத்து குறித்த உடனடி தகவல்கள் அறிய 02553 244020, 02512 311499 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்