முக்கிய செய்திகள்:
செவ்வாய் நோக்கி மங்கள்யான் வெற்றிகர பயணம் - ஒரு லட்சத்து 18,642 கிலோ மீட்டர் உயரத்தில் விண்கலம் நிறுத்தம்

செவ்வாய் கிரக ஆய்வுப்பணிகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ள மங்கள்யான் விண்கலத்தை பூமியில் இருந்து சுமார் ஒரு லட்சத்து 18 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர்த்தும் பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளதன் மூலம், 4-ம் கட்ட வெற்றியை பெற்றுள்ளனர்.

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியகூறுகளைப் பற்றி ஆராய்வதற்கான மங்கள்யான் விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் விண்ணில் செலுத்தியுள்ளனர். இந்த விண்கலம் புவிஈர்ப்பு விசையைக் கடந்து பல்வேறு கட்டங்களாக செவ்வாய் கிரகத்தை நோக்கி வட்டப்பாதையில் நிலைநிறுத்தும் பணியை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை மூன்றுகட்ட பணிகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், மங்கள்யான் விண்கலம் பூமியில் இருந்து 78 ஆயிரத்து 276 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தபோது, அதை மேலும் உயர்த்தும் 4-வது கட்ட பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இப்பணியில் நேற்று தொய்வு ஏற்பட்டது. எனினும், விடா முயற்சியுடன் மங்கள்யான் விண்கலத்தை உயர்த்தும் பணியை மேற்கொண்ட விஞ்ஞானிகள், இன்றுகாலை 5 மணி அளவில் அந்த விண்கலத்தை பூமியில் இருந்து ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 642 கிலோ மீட்டர் தூரம்வரை உயர்த்தினர். இதன்மூலம் அடுத்த கட்ட வெற்றியை பெற்றுள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள், மங்கள்யான் விண்கலத்தை 5-வது மற்றும் இறுதிகட்டமாக உயர்த்தும் பணியினை வரும் 16-ம் தேதி மேற்கொள்ளவுள்ளனர். இந்த பணி நிறைவுபெற்றால், மங்கள்யான் விண்கலம் பூமியில் இருந்து ஒரு லட்சத்து 92 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர்த்தப்படும்.

மேலும் செய்திகள்