முக்கிய செய்திகள்:
இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு எழுதிய கடித விவரங்கள் குறித்து பிரதமர் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காதது தொடர்பாக, இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு எழுதிய கடிதத்தில் அந்நாட்டின் மனித உரிமைகள் மீறல் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் விளக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தேசிய செயலாளர் திரு.டி. ராஜா, காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சிகளின் ஒருமித்த குரலோடு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை சுட்டிக்காட்டினார். இந்த தருணத்தில், காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கப் போவதில்லை என்றும், இதுதொடர்பாக, இலங்கை அதிபருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளதாக திரு.டி. ராஜா தெரிவித்துள்ளார். எந்த அடிப்படையில் தாம் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கவில்லை என்பதை பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ள திரு. டி. ராஜா, இலங்கையின் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து ராஜபக்ஷேவுக்கு அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதையும் வெளிப்படையாக மக்களுக்கு பிரதமர் தெரிவிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார். காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகிய இரண்டு கட்சிகளுமே மக்கள் பிரச்னைகளில் அக்கறை கொள்ளாமல், தனிப்பட்ட முறையில் வார்த்தை போரை நடத்தி வருவதாகவும் திரு. டி. ராஜா குற்றம்சாட்டினார்.

மேலும் செய்திகள்