முக்கிய செய்திகள்:
சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவில் மாவோயிஸ்டுகள் வன்முறை - பாதுகாப்புப் படை வீரர் காயம், பாதுகாப்புப் பணி தீவிரம்

சத்தீஸ்கர் மாநிலத்தில், சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், மாவோயிஸ்டுகள் கன்கர் பகுதியில் வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டத் தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகளில், பஸ்தார், ராஜ்னான்கோன் மாவட்டங்களில் அமைந்துள்ள 12 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இப்பகுதிகளில், மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதால், பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துணை ராணுவப்படையுடன், எல்லைப் பாதுகாப்பு படை, உள்ளூர் போலீசார் உள்பட பல்லாயிரக்கணக்கான வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும், கன்கர் மாவட்டம் சீதாராம் கிராமத்தில் மாவோயிஸ்டுகள் நிகழ்த்திய வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் மட்டும் காயமடைந்தார். முன்னதாக ஜக்தல்பூரில் காங்கிரஸ் கட்சியினருக்கும், பாரதிய ஜனதாவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் காங்கிரஸ் வேட்பாளர் ஷமுகாஷ்யப் காயமடைந்தார். இன்று நடைபெற்று வரும் 18 சட்டசபை தொகுதிகளில் 143 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பதற்றம் மிகுந்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருக்கும் சுக்மா, பிஜபூர், பஸ்தார், தண்டேவாடா, கான்கர் ஆகிய பகுதிகளில் 2 ஆயிரத்து 700 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 72 தொகுதிகளுக்கான தேர்தல், வரும் 19-ம் தேதி நடைபெறவுள்ளது.

மேலும் செய்திகள்