முக்கிய செய்திகள்:
ராணுவத்துக்கு கனரக வாகனங்கள் வாங்கியதில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு பிரதமர் அலுவலகமே காரணம் - வி.கே.சிங் குற்றச்சாட்டு

ராணுவத்துக்கு கனரக வாகனங்கள் வாங்கியதில் நடைபெற்ற முறைகேடுகளுக்கும், தனது வயது குறித்த சர்ச்சைக்கும் பிரதமர் அலுவலகமே காரணம் என முன்னாள் ராணுவ தலைமை தளபதி திரு.வி.கே.சிங் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

முன்னான் ராணுவ தலைமை தளபதி திரு.வி.கே.சிங், வெளியிட்டுள்ள சுயசரிதை புத்தகத்தில் பிரதமர் அலுவலகம் மீது பல திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். திரு.சிங், ராணுவத்திற்கு பொறுப்பு வகித்தபோது, டாட்ரா கனரக லாரிகள் சுமார் 7 ஆயிரம் எண்ணிக்கையில் வாங்கப்பட்டன. இவற்றை விநியோகித்த B.E.M.L. நிறுவனம் இவற்றுக்கு சந்தை விலையைக் காட்டிலும் 4 மடங்கு அதிகமாக விலை நிர்ணயித்து ராணுவத்துக்கு விற்றிருப்பதை தாம் கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொண்டதாகவும் திரு.வி.கே.சிங் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அப்போது பிரதமரின் முதன்மைச் செயலாளரும், தற்போது ஆலோசகராக உள்ளவருமான திரு.டி.கே.ஏ.நாயர் தமது நடவடிக்கைகளை தடுத்து நிறுத்திவிட்டதாகவும், மீறி நடவடிக்கை எடுத்தால், பிரதமர் அலுவலகத்​தின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என தமக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் திரு.வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, தனது பிறந்த தேதி குறித்த சர்ச்சையை இந்த அதிகாரியின் மனைவிதான் எழுப்பியதாகவும், தம்மை விரைவில் பதவி ஓய்வு பெற வைத்து, ஜெனரல் பிக்ரம் சிங்கை இப்பதவியில் நியமிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் திரு.வி.கே.சிங் தெரிவித்துள்ளார். ராணுவ அமைச்சர் திரு.ஏ.கே.அந்தோணி, மிகவும் நல்லவர் என்றும், ஆனால், அதிகாரிகளின் மேலாதிக்கத்தை மீறி அவரால் செயல்பட முடியவில்லை என்றும் திரு.சிங் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்