முக்கிய செய்திகள்:
தமிழகத்திற்கு, 26 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக திறந்துவிட வேண்டும் - கர்நாடக அரசுக்கு காவிரி மேற்பார்வைக் குழு உத்தரவு

காவிரியில், நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின்படி, ஜனவரி மாதம் வரை தமிழகத்திற்கு வழங்கவேண்டிய 26 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு, டெல்லியில் நடைபெற்ற காவிரி மேற்பார்வைக் குழு கூட்டத்தில் உத்தரவிடப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை தாமதமின்றி அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், அதுவரை, காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மின் திட்டங்களை செயல்படுத்த, கர்நாடக அரசுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா மேற்கொண்ட தீவிர முயற்சி காரணமாக, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, மத்திய அரசிதழில் கடந்த ஃபிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து, காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவையும் உடனடியாக அமைக்க வலியுறுத்தி, முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமருக்கு பலமுறை கடிதம் எழுதியிருந்தார். மேலும், இக்கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக அரசின் சார்பில், உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதன் பயனாக, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்தும் வகையில், காவிரி மேற்பார்வைக் குழு அமைக்கப்பட்டது.

இக்குழு, ஏற்கனவே பலமுறை கூடி விவாதித்துள்ள நிலையில், டெல்லியில் நேற்று மீண்டும் காவிரி மேற்பார்வைக் குழுவின் கூட்டம், குழுவின் தலைவரும், மத்திய நீர்வள அமைச்சக செயலாளருமான திரு. அலோக் ராவத் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திருமதி. ஷீலா பாலகிருஷ்ணன், பொதுப்பணித்துறை செயலாளர் திரு. சாய்குமார், காவிரி தொழில்நுட்பப் பிரிவு தலைவர் திரு. சுப்பிரமணி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, நவம்பர் மாதத்திற்கு தமிழகத்திற்கு காவிரியில் திறந்துவிடவேண்டிய 15 டி.எம்.சி. தண்ணீர், டிசம்பர் மாதத்திற்கு உரிய 8 டி.எம்.சி. தண்ணீர் மற்றும் ஜனவரி மாதத்திற்குரிய 3 டி.எம்.சி. என மொத்தம் 26 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசின் சார்பில், காவிரி மேற்பார்வைக் குழுவில் கோரிக்கை வைக்கப்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவையும் உடனடியாக அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும், அதுவரை காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் எந்தவித மின் திட்டங்களையும் செயல்படுத்த கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும் தமிழக அரசு வலியுறுத்தியது.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, காவிரியில் தமிழகத்திற்கு வரும் ஜனவரி மாதம் வரை வழங்கப்படவேண்டிய 26 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட, கர்நாடக அரசுக்கு காவிரி மேற்பார்வைக்குழு உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்