முக்கிய செய்திகள்:
வெற்றிப் பாதையில் மங்கள்யான் விண்கலம் - சுற்றுப்பாதை 70 ஆயிரம் கிலோமீட்டராக அதிகரிப்பு

மங்கள்யான் விண்கலத்தின் சுற்றுப்பாதை நேற்று அதிகாலை 40 ஆயிரம் கிலோமீட்டராக அதிகரிக்கப்பட்ட நிலையில், இன்று​மேலும் 30 ஆயிரம் கிலோமீட்டர் அதிகரிக்கப்படுகிறது

செவ்வாய் கிரகத்திற்கு இஸ்ரோ அனுப்பியுள்ள மங்கள்யான் விண்கலம் திட்டமிட்டபடி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. தற்போது பூமியைச் சுற்றி வரும் இந்த விண்கலத்தின் செலுத்து வாகனத்தின் சுற்றுப்பாதை மெல்ல மெல்ல அதிகரிக்கப்பட்டு வருகிறது. பூமிக்கு அருகில் 248 புள்ளி நான்கு கிலோமீட்டர் தொலைவிலும், பூமியைவிட்டு 23 ஆயிரத்து 550 கிலோமீட்டர் தொலைவிலும், சுற்றுவட்டப் பாதையில் சுழன்று வரும் செலுத்து வாகனம், தற்போது 40 ஆயிரத்து 186 கிலோமீட்டர் தொலைவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. பெங்களூரு கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இயக்கப்பட்டு வரும் செலுத்து வாகனத்தின் வேகம் தற்போது வினாடிக்கு 201 மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுவட்டப் பாதையைச் சுற்றி வர, விண்கலம் எடுத்துக் கொள்ளும் நேரம், 11 மணி 9 நிமிடங்கள் ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மங்கள்யானின் சுற்றுப்பாதை இன்று​மேலும் 30 ஆயிரம் கிலோமீட்டர் அதிகரிக்கப்படுகிறது. சூரியனை மையமாகக் கொண்டு சுற்றி வரும் செலுத்து வாகனம், வருகிற ஒன்றாம் தேதி அந்தப் பாதையைவிட்டு விலகி, செவ்வாய் கிரகத்தை நோக்கி தனது நெடிய பயணத்தை தொடங்க இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதனிடையே, சமூக வலைதளங்கள் மூலம் இஸ்ரோவின் மங்கள்யான் விண்கலம் தொடர்பான தகவல்களை 2 லட்சம் பேர் ஆவலுடன் அறிந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் செய்திகள்