முக்கிய செய்திகள்:
காவிரி: புதுச்சேரியில் பந்த் - இயல்பு வாழ்க்கை முடக்கம்

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், காவிரியில் உரிய தண்ணீரை திறந்துவிடக் கோரியும் புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. கடைகள் முழுமையாக மூடப்பட்டதாலும், வாகனங்கள் இயங்காததாலும் மக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

காவிரியில் நீர் திறந்து விட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து கர்நாடகத்தில் வன்முறை வெடித்தது. தமிழர்கள் தாக்கப்பட்டு, அவர்களது சொத்துக்கள் சூறையாடப்பட்டன. தமிழக வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. இதைக் கண்டித்து தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.

புதுச்சேரியிலும் முழு அடைப்பு:

புதுச்சேரியிலும் முழு அடைப்பு போராட்டம் நடத்த தமிழ் அமைப்புகள், பல்வேறு கட்சிகள் தீர்மானித்தன. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இதற்கு திமுக, பாஜக, விடுதலை சிறுத்தைகள், ஐஜேகே, பாமக, இடதுசாரிகள், வணிகர்கள் கூட்டமைப்பு, லாரி உரிமையாளர்கள் சங்கம், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் என பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்தனர்.

பந்த் போராட்டத்தையொட்டி புதுச்சேரி முழுவதும் மொத்தம் உள்ள 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. நகரின் முக்கிய கடை வீதிகளான நேரு வீதி, பெரிய மார்க்கெட், அண்ணா சாலை, காந்தி வீதி, முத்தியால்பேட்டை, நெல்லித்தோப்பு, அரியாங்குப்பம், வில்லியனூர், பாகூர், காலாப்பட்டு உள்ளிட்ட இடங்களில் கடைகள் மூடப்பட்டிருந்தன. இதனால் பெரும்பாலான இடங்களில் பரபப்பாக காணப்படும் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

வாகனங்கள் ஓடவில்லை:

இதே போல் புதுச்சேரியில் பேருந்துகள், ஆட்டோக்கள், லாரிகள், சரக்கு வாகனங்கள் எதுவும் இயக்கப்படவில்லை. பிஆர்டிசி பேருந்துகள், தனியார் பேருந்துகளும் இயக்கப்படவில்லை. தமிழ்நாடு அரசு பேருந்துகள் ஒருசில மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. புதுச்சேரியில் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

ஆனால் அரசுப் பள்ளிகள் இயங்கின. வாகனங்கள் இயங்காததால் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர், வேலைக்கு சென்ற பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கின. புதுச்சேரியில் உள்ள திரையரங்குகளிலும் காலை, மதியம் என 2 படக்காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டிருந்தன. சுற்றுலாத் தலங்களிலும் வெறிச்சோடி காணப்பட்டது.

மறியல் போராட்டம்:

முழு அடைப்பையொட்டி பல்வேறு தமிழ் அமைப்பினர் புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் கொடும்பாவியை எரித்து தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தொடர்ந்து பேருந்து நிலையத்தினுள் சென்ற அவர்கள் தமிழக அரசு பேருந்துகளின் கூரைகளின் மேல் ஏறி கர்நாடகத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதே போல் அரியாங்குப்பம் பகுதியில் கடலுார்-புதுச்சேரியில் சாலையில் வாகனங்களின் டயர்களை எரித்து தங்களுடைய எதிர்ப்பை காட்டினர்.

தட்டாஞ்சாவடி வழுதாவூர் சாலையில் வந்த புதுச்சேரி பல்கலைக்கழகத்துக்கு இயக்கப்படும் பிஆர்டிசி பேருந்து, மூலகுளம் பகுதியில் வந்த தமிழக அரசு பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கற்கலை வீதி தாக்குதல் நடத்தினர். இதில் பேருந்தின் கண்ணாடிகள் நொறுங்கின.

பலத்த பாதுகாப்பு

முழு அடைப்பு போராட்டத்தில் எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்க டிஜிபி சுனில்குமார் கொதம் உத்தரவின்படி 1000-க்கு மேற்பட்ட போலீஸார் முக்கிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கர்நாடக வங்கி உள்ளிட்டவைகளுக்கு ஆயுதம் ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

 

மேலும் செய்திகள்