முக்கிய செய்திகள்:
ஆந்திராவை டிஜிட்டல் மாநிலமாக மாற்றுவேன்: ஆசிரியர் தின விழாவில் சந்திரபாபு நாயுடு உரை

ஆந்திர மாநிலத்தை டிஜிட்டல் மாநிலமாக மாற்ற விரும்புவதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

ஆசிரியர் தினத்தையொட்டி குண்டூரில் நடைபெற்ற விழாவில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:-

நமது நாட்டை டிஜிட்டல் இந்தியாவாக உருவாக்கும் லட்சியத்துடன் பிரதமர் செயல்பட்டு வருகிறார். நான் மற்ற மாநிலங்களுக்கு முன்னதாக ஆந்திராவை டிஜிட்டல் மாநிலமாக மாற்றுவது பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

இந்த இலக்கை எட்டுவதற்கு, அனைத்து கல்வி நிறுவனங்களிலும் வைபை சேவையை வழங்க வேண்டும். தகவல் தொழில்நுட்பம் பற்றி மாணவர்கள் தங்கள் திறமையை வளர்த்துக்கொள்வதற்கும், புத்தகச் சுமையைக் குறைப்பதற்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஐபேடுகள் வழங்க திட்டமிட்டுள்ளேன்.மத்திய அரசு விரும்பியபடி ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற உயர் கல்வி நிறுவனங்களை அதிக அளவில் உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. அவை நிறுவப்பட்டபிறகு, ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஆசிரியர்களின் சேவைகளை, வீடியோ கான்பரன்சிங் மூலம் மற்ற நிறுவன மாணவர்களுக்கும் பயன்படுத்த வேண்டும்.

ஆந்திராவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 100 சதவீத கல்வியறிவை எட்டுவதற்கு ஆசிரிய சமுதாயம் பாடுபட வேண்டும். கல்வியறிவு விகிதத்தில் இந்தியாவில் நம் மாநிலம் 31-வது இடத்தில் உள்ளது. ஆனால், தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்கிறது.இவ்வாறு அவர் பேசினார். மாநிலத்தின் சிறந்த ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்ட 175 ஆசிரியர்களுக்கு, இந்த விழாவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு விருதுகளை வழங்கினார். மேலும், அவருக்கு கல்வி போதித்த இரண்டு ஆசிரியர்களையும் கவுரவித்தார்.

 

மேலும் செய்திகள்