முக்கிய செய்திகள்:
சி.பி.ஐ. டைரக்டர் கோரிக்கையை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா மீது பிரபல வக்கீல் பிரசாந்த் பூஷண் பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தி டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.அந்த மனுவில் அவர், 2ஜி ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்தினரை சி.பி.ஐ. இயக்குனர் சந்தித்து பேசியுள்ளார். சுமார் 50 தடவை இந்த சந்திப்பு நடந்துள்ளது. இது 2ஜி ஊழல் வழக்கு விசாரணையை பாதிப்பதாகவும், திசை திருப்புவதாகவும் உள்ளது  என்று கூறி இருந்தார்.

ரஞ்சித் சின்காவின் சந்திப்புகளுக்கான ஆதாரங்களையும் வக்கீல் பிரசாந்த் பூசன் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்தார். இந்த குற்றச்சாட்டை முதலில் சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா மறுத்தார்.பிறகு நேற்று அவர் ரிலையன்ஸ் அதிகாரிகளை சந்தித்தது உண்மைதான். ஆனால் 50 தடவை சந்திக்கவில்லை. ஓரிரு தடவை சந்தித்து பேசி இருப்பேன். இதற்காக நான் அவர்களுக்கு ஆதரவாக நடந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு எந்தவித சலுகையும் காட்டவில்லை என்றார்.

இதற்கிடையே ரஞ்சித் சின்கா சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு செய்தார். அதில் அவர், என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை. எனவே என்னை தினமும் சந்தித்துப் பேசியவர்கள் பற்றிய டைரி குறிப்புகளை பத்திரிகைகள் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.ஆனால் சுப்ரீம் கோர்ட்டு அவரது இந்த கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. ரஞ்சித் சின்காவை சந்தித்தவர்கள் பற்றி பத்திரிகைகள் செய்தி வெளியிடலாம் என்று கூறிய நீதிபதிகள், இந்த விஷயத்தில் பத்திரிகைகள் செய்தி வெளியிடும்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

 

மேலும் செய்திகள்