முக்கிய செய்திகள்:
தூய்மையான இந்தியா : மோடி அழைப்பு

ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் டோக்கியோவில் இன்று இந்திய சமுதாயத்தினரியே உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- நாம் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் நமது பாரம்பரியம் பற்றி பெருமை கொள்ள வேண்டும். நாட்டை விட்டு எங்கு சென்றாலும் நமது வேர்களை மறந்துவிடக் கூடாது.

மகாத்மா காந்திக்கு நமது நாடு கடமைப்பட்டுள்ளது. தூய்மை விஷயத்தில் அவர் ஒருபோதும் சமரசம் செய்துகொண்டதில்லை. நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்த அவருக்காக நாம் என்ன செய்திருக்கிறோம்? அவரை கவுரவிக்க ஏதாவது செய்ய வேண்டும். எனது நோக்கமும் தூய்மையான இந்தியாவை உருவாக்குவதுதான். எனவே, 2019-ம் ஆண்டிற்குள் தூய்மையான இந்தியா என்ற இலக்கை எட்ட உறுதி பூண்டுள்ளோம். இதுவே அவருக்கு நாம் செலுத்தும் காணிக்கையாகும்.

இந்திய சமுதாயம் எந்த நாட்டிற்குச் சென்றாலும் அங்கு சமூகத்தில் இருந்து எந்த புகாரும் வந்ததில்லை. பாம்பாட்டி நாடாக கருதப்பட்ட நம் நாடு, இப்போது தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குகிறது. ஒரு மவுசை நகர்த்தினால் ஒட்டுமொத்த உலகமே நகர்கிறது. உலக பொருளாதார வளர்ச்சிக்கான பெருமை இந்தியர்களையே சாரும்.

எனது ஜப்பான் சுற்றுப்பயணம் மிகவும் வெற்றிகரமாக அமைந்தது. நம் மீது ஜப்பான் வைத்துள்ள நம்பிக்கை மகிழ்ச்சி அளிக்கிறது. இது ஆழமான நட்பை உருவாக்குகிறது. ஜப்பான் கிட்டத்தட்ட 35 பில்லியன் டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்