முக்கிய செய்திகள்:
எதிர்க்கட்சி தலைவர் பதவி: 9–ந்தேதிக்குள் முடிவு எடுக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கெடு

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து பெறுவதற்கு தேவையான எம்.பி.க்கள் பலம் கூட காங்கிரசிடம் இல்லை. இதனால் மத்திய அரசு காங்கிரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்க மறுத்துவிட்டது.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கும் வழங்கப்படாமல் நடந்து முடிந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சி தங்களுக்கு பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது. சுப்ரீம் கோர்ட்டிலும் எதிர்க்கட்சி அந்தஸ்து கேட்டு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தள்ளுபடி ஆனது.

இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் மற்றொரு பெஞ்ச் இன்று பரபரப்பு கருத்து வெளியிட்டு உள்ளது. ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா தொடர்பான வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தெரிவித்த கருத்து வருமாறு:–

லோக்பால் சட்டத்தின்படி எதிர்க்கட்சி தலைவர் பதவி மிகவும் முக்கியமான அம்சமாக விளங்குகிறது. லோக்பால் நியமனக் குழுவில் எதிர்க்கட்சி தலைவர் முக்கிய உறுப்பினர் ஆவார். பாராளுமன்றத்தில் மத்திய அரசு முன்வைக்கும் எதிர்மறையான விஷயங்களை எடுத்துரைத்து அதற்காக குரல் கொடுப்பதே எதிர்க்கட்சித் தலைவரின் முக்கியப் பணியாகும்.

லோக்பால் நியமனக் குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் இடம்பெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எனவே எதிர்க்கட்சி தலைவர் என்ற வார்த்தைக்கு மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். அதை நீண்ட காலத்துக்கு நிலுவையில் வைத்திருக்க முடியாது.

எதிர்க்கட்சி தலைவர் பதவி விவகாரம் குறித்து மத்திய அரசு வருகிற செப்டம்பர் மாதம் 9–ந்தேதிக்குள் இறுதி முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க கோரி நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்