முக்கிய செய்திகள்:
காஷ்மீர் எல்லையில் பாக். ராணுவம் மீண்டும் அத்துமீறல்

இந்தியா– பாகிஸ்தான் இடையேயான 2003–ம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந் தத்தை மீறும் வகையில் பாகிஸ்தான் இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.பலமுறை இந்தியா எச்சரித்தும், பதிலடி கொடுத்தும் பாகிஸ்தான் தனது அத்துமீறலை நிறுத்திக் கொள்ளவில்லை. கடந்த வாரம் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் பலியானார். 2 பேர் காயம் அடைந்தனர்.

இதையடுத்து காஷ்மீர் தொடர்பான இந்தியா– பாகிஸ்தான் அதிகாரிகள் இடையேயான பேச்சு வார்த்தையை இந்தியா ரத்து செய்தது. அதன்பிறகும் பாகிஸ்தான் இந்திய எல்லையில் அத்துமீறலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.நேற்று இரவு ஜம்மு அருகே ஆர்.எஸ்.புரா பகுதியில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கியாலும் மோர்டர் ரக குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியது.

இதில் சில குண்டுகள் எல்லைப் பகுதியில் உள்ள கிராமங்களில் விழுந்தது. இதில் கிராமங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. ஆனால் உயிர்ச்சேதம் ஏற்பட்டது பற்றி தகவல் ஏதும் இல்லை.உடனே எல்லைப் பாதுகாப்பு படையினர் திருப்பி சுட்டு பதில் தாக்குதல் நடத்தினார்கள். அங்கு தாக்குதல் தொடர்ந்து நீடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2 நாட்களுக்கு முன்புதான் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. கடந்த 11 நாட்களில் பாகிஸ்தான் 14 முறை அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

பாகிஸ்தான் தாக்குதல் நீடிப்பதால் எல்லைக் கிராமங்களில் பதட்டம் நிலவுகிறது.

 

மேலும் செய்திகள்