முக்கிய செய்திகள்:
அர்ச்சனா ராமசுந்தரம் நியமன விவகாரம்: தடை உத்தரவை திரும்ப பெற உச்ச நீதிமன்றம் மறுப்பு

சி.பி.ஐ. கூடுதல் இயக்குனராக அர்ச்சனா ராமசுந்தரம் நியமிக்கப்பட்டார். தமிழக அரசு பணியில் இருந்து விடுவிக்கப்படாத நிலையில் அவர் நியமனம் செய்யப்பட்டதால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதையடுத்து அர்ச்னா ராமசுந்தரம் சி.பி.ஐ. கூடுதல் இயக்குனராக தொடர இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

இதேபோல் அர்ச்சனா ராமசுந்தரம் நியமனத்தில் விதிமுறை மீறப்பட்டிருப்பதாகக் கூறி பொதுநல வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு இன்று தலைமை நீதி லோதா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி வாதாடினார்.

சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு மூலம் மூன்று பேரின் பெயர்கள் மத்திய அரசுப் பணிக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அர்ச்சனா ராமசுந்தரத்தை சி.பி.ஐ. கூடுதல் இயக்குநராக நியமிப்பது குறித்து கேட்டதற்கு தமிழக அரசிடம் இருந்து பதில் இல்லை என்று ரோஹக்கி கூறினார்.

தமிழக அரசின் வழக்கறிஞர் வாதாடும்போது, தமிழக அரசு பரிந்துரை செய்திருந்தாலும் பணியில் இருந்து விடுவிக்கப்படாத நிலையில் அவரை நியமித்தது விதிமீறல் என்றார்.

அப்போது மாநில அரசு விடுவிக்கும் முன்பாக அவர் நியமிக்கப்பட்டது எப்படி? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை திரும்ப பெற மறுத்துவிட்டார். அரசின் இத்தகைய நடவடிக்கைகளால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பணிப்பயன்கள் பாதிக்கப்படக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், அர்ச்சனா நியமனம் தொடர்பான பிரச்சினையை தீர்ப்பதற்கு மத்திய அரசு தனது நிலைப்பாட்டை அக்டோபர் 14-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதி, வழக்கு விசாரணையை அக்டோபர் 14-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

மேலும் செய்திகள்