முக்கிய செய்திகள்:
காங்கிரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடையாது: மக்களவை சபாநாயகர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெறுவதற்கு அக்கட்சி குறைந்தது 55 எம்.பி.க்களை பெற்றிருக்க வேண்டும். ஆனால், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 44 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதால் காங்கிரஸ் கட்சிக்கு அந்த தகுதியை வழங்குவதில் நடைமுறைச் சிக்கல் ஏற்பட்டது.

ஆனாலும் பாராளுமன்றத்தில் 2-வது பெரிய கட்சி என்ற வகையிலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சி எம்.பி.க்களின் எண்ணிக்கை 60 இருப்பதாலும் காங்கிரசுக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.

இந்த சிக்கலான விஷயத்தில் சட்ட நிபுணர்கள் மற்றும் அரசியல் சட்ட நிபுணர்களின் கருத்து கேட்டுதான் முடிவு எடுக்கப்படும் என்று சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறியிருந்தார். அதன்படி அட்டார்னி ஜெனரல் முகுல் ரோஹத்கியின் கருத்தை அவர் கேட்டிருந்தார். அட்டார்னி ஜெனரல் தனது கருத்தை சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு அனுப்பினார்.

அதில் காங்கிரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோரும் தகுதி இல்லை என்று கூறியிருந்தார். 10 சதவீத இடங்களை பெறாத ஒரு கட்சிக்கு கேபினட் அந்தஸ்துடன் கூடிய எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கியதாக முன்னுதாரணங்கள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அவரது கடிதத்தை முழுவதும் ஆராய்ந்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன், காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை இன்று நிராகரித்தார். காங்கிரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட மாட்டாது என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

மேலும் செய்திகள்