முக்கிய செய்திகள்:
சியாச்சின் விவகாரத்தில் எந்த ஒரு சமரசத்துக்கும் இடம் இல்லை : மோடி

லே நகரில் ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:–

இந்தியா வலிமையான, நவீன – தொழில்நுட்பம் கொண்ட படையுடன் உள்ளது. நமது படைகளை மேலும் நவீனப்படுத்தவும், ஒருவருக்கு ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம் உள்பட முப்படை வீரர்களின் நலத் திட்டங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும்.

நமது வீரர்களின் தியாகத்தை போற்ற தேசிய போர் நினைவுச் சின்னம் கட்டப்படும். அது எதிர்கால இந்தியர்களுக்கு உணர்வைத் தூண்டுவதாக அமையும்.சியாச்சின் விவகாரத்தில் எந்த ஒரு சமரசத்துக்கும் இடம் இல்லை. அதை விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கும் இடமில்லை. இந்தியா தனக்கு தேவையான பாதுகாப்பு தளவாடங்களை உற்பத்தி செய்வதில் தன்னிறைவு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

எல்லையில் உள்ள நமது படைகள் உள்ளூர் மக்களுடன் நன்கு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். அதனால்தான் கார்கிலில் நமது அண்டை நாடு ஊடுருவியதை ஆடு மேய்க்கும் தஸ்கி நம்ஜியில் கண்டுபிடித்து தகவல் கொடுத்தார்.நமது அண்டை நாடு (பாகிஸ்தான்) நம்முடன் நேரில் போர் நடத்தும் வலிமையை இழந்து விட்டது. எனவேதான் அது தீவிரவாதிகள் மூலம் மறை முக போர் நடத்தி கொண்டிருக்கிறது. இது கண்டனத்துக்குரியது.

இந்திய ராணுவ வீரர்கள் போரில் உயிரிழப்பதை விட பாகிஸ்தானின் மறைமுக தீவிரவாத போரால் அதிக அளவில் உயிரிழக்கிறார்கள். இது உலகளாவிய பிரச்சினையாகும். இதற்கு எதிராக எல்லா மனிதாபிமான அமைப்புகளும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.இந்த மனிதாபிமான படைகளை ஒற்றுமைப்படுத்தும் முயற்சிகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது. இந்திய வீரர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தினசரி வீட்டு பிரச்சினைகளை மறந்து நாட்டை காவல் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த நாடே உதவும் என்று உறுதி அளிக்கிறேன்.

ராணுவ வீரர்களின் கடமை உணர்வு எனக்கு ஒரு தூண்டுகோலாக உள்ளது.எனவேதான் நான் அடிக்கடி எல்லைப் பகுதிக்கு வந்து நமது வீரர்களை பார்ப்பதை வழக்கத்தில் வைத்துள்ளேன்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். அவர் புறப்பட்டு செல்லும் முன்பு ராணுவ வீரர்களிடம் சென்று பேசி தட்டிக் கொடுத்து விட்டு சென்றார்.

மேலும் செய்திகள்