முக்கிய செய்திகள்:
லாலு-நிதிஷ் கூட்டணி பிரச்சாரம்

பீகார் மாநிலத்தில் காலியாக உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு இம்மாதம் 21ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்தும் வண்ணம் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரியா ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

மொத்தமுள்ள 10 தொகுதிகளில் தலா நான்கில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளமும் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கட்சி இரு இடங்களில் போட்டியிடுகின்றது.

இடைதேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்து வரும் நிலையில் லாலுவும், நிதிஷும் இன்று நடந்த பேரணியில் ஒன்றாக கலந்து கொண்டதுடன் ஒரே மேடையில் தங்கள் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தனர். அம்மாநிலத்தில் உள்ள ஹாஜிப்பூரில் நடைபெற்ற பேரணியில் இரு தலைவர்களும் கலந்து கொண்டு ஒன்றாக தேநீர் அருந்தியதுடன், தங்கள் கைகளை ஒருவருக்கொருவர் இணைத்து மேலே தூக்கி கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தினர்.

20 வருடங்களுக்கும் மேலாக எதிரெதிர் துருவங்களாக இருந்த இருவரும் தற்போது பா.ஜ.க.வை முறியடிக்கும் நோக்கில் கூட்டணி அமைத்துள்ளனர். இரு தலைவர்களும் மேலும் சில தொகுதிகளில் இணைந்து பிரச்சாரம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்