முக்கிய செய்திகள்:
மேல்–சபையில் காங்கிரஸ் அமளி

உணவு பாதுகாப்பு விவகாரத்தில் உலக வர்த்தக அமைப்பிடம் முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு சமரசம் செய்து கொண்டதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டி இருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து டெல்லி மேல்– சபையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

டெல்லி மேல்–சபை கூடியதும் காங்கிரஸ் உறுப்பினர் ஆனந்த்சர்மா கேள்வி நேரத்தை ரத்து செய்யக் கோரிதான் நோட்டீஸ் வழங்கியதாக கூறினார். அவை தலைவர் அதை ஏற்க மறுத்தார்.

இதை தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் மோடியின் குற்றச்சாட்டை ஏற்க மறுத்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் 10 நிமிடத்துக்கு அவையை மேல்–சபை தலைவர் ஒத்தி வைத்தார்.

சபை மீண்டும் கூடியதும் காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

நிதி மந்திரி அருண்ஜேட்லி வழங்கிய பதிலையும் ஏற்காமல் அவர்கள் கூச்சலிட்டனர். இதனால் சபை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

பாராளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி நேரத்தின் போது தெலுங்கானா உறுப்பினர்கள் ஐதராபாத்தில் சட்டம்–ஒழுங்கு பராமரிப்பு தொடர்பான அதிகாரம் கவர்னருக்கு வழங்கப்பட்டதை கண்டித்து சபாநாயகரை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபை 10 நிமிடம் ஒத்தி வைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்