முக்கிய செய்திகள்:
திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

கடந்த 2 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அமைந்ததால், ஏழுமலையானை தரிசிப்பதற்காக வந்த பக்தர்களின் கூட்டத்தால் திருமலை நிறைந்தது.

தரிசனத்திற்கு செல்லும் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ்சின் 31 கம்பார்ட்மெண்ட்களும் நிரம்பி, அதற்கு வெளியே சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். அதனால், ஏழுமலையான் தரிசனத்திற்கு சுமார் 22 மணி நேரம் வரை ஆயிற்று. எனவே, முக்கிய பிரமுகர்களின் (வி.ஐ.பி.) சிபாரிசு கடிதங்களுக்கான அனுமதி நேற்று நிறுத்தி வைக்கப்பட்டது.

வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் இலவச உணவு பொட்டலங்கள் மற்றும் பால், மோர், குளிர்பானங்கள் போன்றவை வினியோகிக்கப்பட்டன. திருமலை–திருப்பதி தேவஸ்தான துணை அதிகாரி சீனிவாசராஜு, கோவில் அதிகாரி சின்னம்காரி ரமணா உள்ளிட்டோர் கியூ வரிசையை பார்வையிட்டு, பக்தர்களின் குறைகளை கேட்டறிந்தனர். தேவையான வசதிகளையும் செய்து கொடுத்தனர்.

கூட்டம் அதிகமாக இருந்ததால், பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துவதற்கு சுமார் 3 மணி நேரம் வரை காத்திருந்தனர்.

நேற்று முன்தினம் ஏழுமலையானை 72 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ததாகவும், உண்டியல் வருமானமாக ரூ.2 கோடியே 10 லட்சம் கிடைத்ததாகவும் தேவஸ்தான அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்