முக்கிய செய்திகள்:
பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க ராணுவ மந்திரி சந்திப்பு

அமெரிக்க ராணுவ மந்திரி சக் ஹேகல், இந்தியாவுக்கு வந்துள்ளார். அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

இருதரப்பு விவகாரங்களை பொறுத்தவரை, தனது தலைமையிலான புதிய அரசுடன், அமெரிக்கா மேற்கொண்டு வரும் மேல்மட்ட உறவுக்கு மோடி வரவேற்பு தெரிவித்தார். அடுத்த மாதம் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனான சந்திப்பை ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாக மோடி குறிப்பிட்டார்.இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் என்னென்ன செய்யலாம் என்பதற்காக இல்லாமல், உலகஅளவில் அமைதி, ஸ்திரத்தன்மை, வளமை நிலவ இரு நாடுகளும் எப்படி கூட்டு சேரலாம் என்று சிந்திப்பதற்காகத்தான் அமெரிக்க பயணத்தை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார். ராணுவ உறவை மேம்படுத்துவதன் அவசியத்தையும் குறிப்பிட்டார்.

பின்னர், இருவரும் ஈராக் உள்நாட்டு போர் குறித்து விவாதித்தனர். ஈராக்கில் அமைதியை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ள திட்டங்கள் பற்றி மோடியிடம் சக் ஹேகல் விளக்கிக் கூறினார்.

ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத்தினரை பாதுகாக்க விமான தாக்குதல் நடத்துவது பற்றியும், ஈராக்கில் மலை உச்சியில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான சிறுபான்மையினருக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள் போடுவது பற்றியும் அவர் எடுத்துக் கூறினார்.ஆப்கானிஸ்தான் நிலவரம் பற்றியும் இருவரும் விவாதித்தனர். அங்கு விரைவாக தேர்தல் நடத்தி முடித்தது பற்றியும், ஆட்சி மாற்றம் சுமுகமாக நடந்தது பற்றியும் நரேந்திர மோடி திருப்தி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்