முக்கிய செய்திகள்:
டெல்லி சுதந்திர விழா நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்க ஏற்பாடு

இந்தியாவின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி ஆண்டுதோறும் தலைநகர் டெல்லியில் வண்ணமயமான முப்படைகளின் கண்கவர் அனிவகுப்பும், அதனைத் தொடர்ந்து செங்கோட்டையில் இந்தியக் கொடியினை ஏற்றி வைத்து பிரதமர் சுதந்திர தின சிறப்புரையாற்றும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

இந்நிகழ்ச்சியில் மந்திரிகள், அரசு உயரதிகாரிகள், அரசியல் கட்சி தலைவர்கள், அனைத்து துறைகளை சார்ந்த முக்கிய பிரபலங்கள் ஆகியோர் கலந்து கொள்வதுண்டு. இவ்விழாவினை தொலைக்காட்சி ஒளிபரப்பின் மூலம் தான் இதுவரை சராசரி பொதுமக்கள் பார்த்து வந்தனர். இந்த ஆண்டின் சுதந்திர தின விழா நிகழ்ச்சியின் போது பிரதமர் நரேந்திர மோடியின் உயிருக்கு தீவிரவாதிகளால் ஆபத்து நேரலாம் என்று உளவுத்துறை எச்சரித்துள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, கண்காணிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், டெல்லி செங்கோட்டையில் இந்த ஆண்டு நடைபெறும் கொடியேற்றும் விழாவை 10 ஆயிரம் பொது மக்கள் நேரில் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி முதன்முதலாக சுதந்திர தின சிறப்புரையற்றும் மேடைக்கு வலதுபுறமாக பொதுமக்களும், அதே எண்ணிக்கையிலான மாணவ- மாணவியரும் அமர்ந்து விழா நிகழ்ச்சிகளை பார்வையிட ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

அது மட்டுமின்றி, சுதந்திர தினத்தன்று இவ்விழாவுக்கு பொதுமக்கள் வந்துசெல்ல வசதியாக காலை 6 மணியில் இருந்து 10 மணி வரை இலவச பஸ்களை இயக்கவும் டெல்லி போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. செல்போன், கேமரா, தொலைநோக்கி, கைப்பை, கைப்பெட்டி, சிகரெட் லைட்டர், டிரான்ஸிஸ்ட்டர் ரேடியோ, டிபன்பாக்ஸ், தண்ணீர் பாட்டில் போன்றவற்றுடன் வரும் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்