முக்கிய செய்திகள்:
மின் நிலையங்கள் நவீனமாக மாற்றப்படும்: மத்திய அரசு

மின்சார உற்பத்தியை அதிகரிக்க 25 வருடங்களுக்கு முன்புள்ள அனைத்து மின்உற்பத்தி நிலையங்களும் நவீனமாக மாற்றப்படும் என்று மக்களவையில் மின்சாரத்துறை மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

பழமையான அனைத்து மின்உற்பத்தி நிலையங்களும் நவீன மற்றும் சுற்றுப்புற சூழலை பாதிக்காத மின் உற்பத்தி நிலையங்களாக படிப்படியாக மாற்றம் செய்யப்படும்.

தொடர்ச்சியாக பழுது, போதுமான உற்பத்தி திறன் இல்லாமை, சுற்றுச்சூழல் மாசுபடுதல் ஆகியவைதான் இந்த நடவடிக்கைக்கு முக்கிய காரணம். நமது நாட்டில் தற்போது மின்உற்பத்தி நிலைமை நன்றாக இல்லை. 2 மாதங்களுக்கு முன்புதான் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பொறுப்பேற்றுள்ளது. மின்சாரத்துறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்து, அந்த துறையில் அதிக முதலீட்டை அரசு வரவேற்க வேண்டும்.

2002-03-ம் ஆண்டு முதல் 55 ஆயிரத்து 900 மெவாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 117 நீர்மின் திட்டங்கள் தொடர்பான விரிவான அறிக்கைகள் மத்திய மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திற்கு வந்துள்ளன. அவற்றில் 71 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மதிப்பீட்டு நிறுவனங்களின் பரிந்துரையைத் தொடர்ந்து 27 திட்ட அறிக்கைகள் திருப்பி அனுப்பப்பட்டு, தெளிவான அறிக்கையை சமர்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மீதமுள்ள 19 திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்