முக்கிய செய்திகள்:
அரசியல் சட்ட அம்சங்களை நனவாக்குவதிலும் வக்கீல்கள் முக்கிய பணியாற்றுகிறார்கள் : பிரணாப் முகர்ஜி

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை அடுத்த ஷமீர்பேட்டையில் உள்ள ‘நல்சார்’ சட்ட பல்கலைக்கழகத்தின் 12-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்.

விழாவில் கவர்னர் இ.எஸ்.எல்.நரசிம்மன், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பட்டங்களை வழங்கி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசுகையில் கூறியதாவது:-

சட்ட பல்கலைக்கழகங்களில் நல்சார் சட்ட பல்கலைக்கழகம் சிறந்து விளங்குகிறது. இங்கு படித்தவர்கள் சட்டத்தொழிலின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள். மக்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதிலும், நமது அரசியல் சட்ட அம்சங்களை நனவாக்குவதிலும் வக்கீல்கள் முக்கிய பணியாற்றுகிறார்கள். இதில் அவர்களின் பங்களிப்பு மகத்தானது.

சமூக பொருளாதார வாழ்வியலுடன் இணைந்த வக்கீல் தொழில், சட்டத்தின் ஆட்சி நடைபெறும் சமூகத்தில் மெச்சத்தகுந்த சிறந்த பணியாக விளங்குகிறது. நம் நாட்டில் மிகப்பெரிய தலைவர்களாக விளங்கியவர்களில் பலர் வழக்கறிஞர்கள் ஆவார்கள். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோர் வழக்கறிஞர்கள் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

வக்கீல் தொழிலில் இருந்து நல்ல பயிற்சி பெற்று பின்னர் தலைவர்கள் ஆன பலர் தேசிய இயக்கத்தில் பங்கு கொண்டு நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டு இருக்கிறார்கள். விவாத திறமை, மன தைரியம் போன்றவை சிறந்த வழக்கறிஞர்களுக்கான குணநலன்கள் ஆகும். சாமானிய மக்கள் உள்ளிட்ட சமுதாயத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும். நமது சட்டக்கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு கல்வியை போதிப்பதோடு அவர்களை சிறந்தவர்களாகவும் உருவாக்கவேண்டும். சட்ட கல்வியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவ்வாறு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறினார்.

மேலும் செய்திகள்