முக்கிய செய்திகள்:
இந்திய மருத்துவ கவுன்சில் மீது மத்திய சுகாதார மந்திரி கடும் தாக்கு

நாடு முழுவதிலும் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய மருத்துவ கவுன்சில் அமைப்பிடம் தங்களது கல்லூரிகளின் அங்கீகாரத்தை புதுப்பிக்கவேண்டும். அதன் பின்னர்தான் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு அனுமதி கிடைக்கும். இந்த ஆண்டு பல்வேறு குறைபாடுகளைக் கூறி 70-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிக்க அகில இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி மறுத்துவிட்டது. இதற்கான விண்ணப்ப காலக்கெடுவை நீட்டிக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய சுகாதார அமைச்சகம் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி ஆனது.

இதன் காரணமாக நாட்டில் மொத்தமுள்ள 3,920 மருத்துவ படிப்பிற்கான இடங்களில் 2,750 இடங்களுக்கு மட்டுமே மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கிடைத்தது. 1,170 இடங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இந்த பற்றாக்குறை ஏற்பட்டதற்கு அகில இந்திய மருத்துவ கவுன்சில்தான் காரணம் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்சவர்தன் கடும் கண்டனம் தெரிவித்தார்.

இது குறித்து அவர் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மருத்துவ கல்லூரிகளுக்கு கட்டுப்பாடுகள் என்ற பெயரில் அகில இந்திய மருத்துவ கவுன்சில் மருத்துவ படிப்பின் மீது திடீர் தாக்குதலை நடத்தி உள்ளது. மருத்துவ கல்லூரிகளின் நிர்வாகத்தை தண்டிப்பதை விடுத்து மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களைத் தண்டித்து இருக்கிறது.இதன் காரணமாக மருத்துவம் படித்து டாக்டர் ஆகவேண்டும் என்கிற மாணவர்களின் லட்சியக் கனவை அகில இந்திய மருத்துவ கவுன்சில் நீர்த்துப் போகச் செய்துவிட்டது. தவிர இந்த மாணவர்கள் இனி வேறு படிப்புகளை தேர்ந்தெடுக்க முடியாத நிலையும் ஏற்பட்டு விட்டது.

நான் பலமுறை கேட்டுக்கொண்டபோதிலும் அகில இந்திய மருத்துவ கவுன்சில் பகைமை உணர்வுடனேயே செயல்பட்டு வருகிறது. இதனால்தான் எனது அமைச்சகம் தனியார் மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தை புதுப்பிப்பதற்கான விண்ணப்ப காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்யும் நிலையும் ஏற்பட்டது.மருத்துவ கவுன்சிலின் போக்கு எதேச்சதிகாரம் கொண்டதாக இருக்கிறது. அங்கீகாரம் அளிக்கப்படாத மருத்துவ கல்லூரிகள் பலவற்றில் குளுகுளு வசதி சரிவர இல்லை, கட்டிடங்களின் தடுப்புச் சுவர் தடிமனாக இல்லை என்பது போன்ற சிறுசிறு பிரச்சினைகளைக் கூட காரணம் காட்டி அனுமதி மறுத்து இருக்கிறார்கள்.

ஒரு கல்லூரியில் போதுமான மருத்துவ இதழ்கள் இல்லை என்று அனுமதி மறுத்துள்ளனர். இ-இதழ்கள் என்னும் நவீன முறை வந்துவிட்ட இந்த காலகட்டத்தில் இதுபோன்ற குறைபாடுகளைக் கூறுவது பொருத்தமற்றது.மாணவர்களை மருத்துவ படிப்பிற்கு அனுமதித்து விட்டு அதன் பின்னர், கல்லூரி நிர்வாகத்தினருக்கு அழுத்தம் கொடுத்தால் இதுமாதிரியான குறைபாடுகளை களைந்துவிடலாம். இது தான் இதற்கான சிறந்த தீர்வும் ஆகும்.

தவிர, இந்த குறைகளை களைந்துவிடுகிறோம் என்று பெரும்பாலான கல்லூரி நிர்வாகங்கள் ஒப்புக்கொண்டும் கூட அதனை மருத்துவ கவுன்சில் ஏற்றுக்கொள்ளவில்லை.மருத்துவ கல்லூரிகளில் இடப்பற்றாக்குறை ஏற்படுத்துவதை விடுத்து மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களின் தலைவிதி குறித்து சிந்திக்க வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் நான் அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் தலைவரை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்