முக்கிய செய்திகள்:
யுபிஎஸ்சி தேர்வு சர்ச்சைக்கு தீர்வு: ராஜ்நாத் சிங் உறுதி

யு.பி.எஸ்.சி. முதன்மைத் தேர்வில் கடந்த 2011-ல் சிசாட் (CSAT) எனப்படும் தேர்வு முறை அமல்படுத்தப்பட்டது. யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வில், சிசாட்-1 சிசாட்-2 (CSAT I, CSAT II) என தலா 200 மதிப்பெண்கள் கொண்ட இரண்டு கேள்வித்தாள்கள் இருக்கின்றன. இதில் 2-வது தாளில் ஆங்கில திறனறி கேள்விகளும் இடம்பெற்றுள்ளன. இந்த கேள்விகள் கிராமபுற மாணவர்களுக்கு கடினமாக இருக்கிறது. ஆங்கிலப் புலமை அதிகமுள்ள மாணவர்களுக்கே இது சாதகமாக இருக்கிறது என்பது மாணவர்களின் குற்றச்சாட்டு.

முதன்மைத் தேர்வில் இந்த புதிய நடைமுறையை எதிர்த்து, டெல்லியில் மாணவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது.இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்: யு.பி.எஸ்.சி. சர்ச்சைக்கு ஒர வார காலத்தில் தீர்வு காணப்படும். இதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

நேற்றுகூட, பிரதமர் நரேந்திர மோடி உத்தரவை ஏற்று யு.பி.எஸ்.சி. சர்ச்சைக்கு தீர்வு காண்பது குறித்து நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் கலந்து கொண்ட உயர் நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது என்றார்.மேலும் அவர் கூறுகையில், சிசாட் (CSAT) தேர்வு முறையில் திருத்தங்கள் மேற்கொள்வது குறித்து பரிசீலித்து வரும் 3 பேர் கொண்ட குழு, கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படாத வண்ணம் திருத்தங்கள் மேற்கொள்வதை ஆராய்ந்து வருகிறது என்றார்.இருப்பினும், ஆகஸ்ட் 24-ல் அறிவிக்கப்பட்டுள்ள முதன்மைத் தேர்வு தள்ளிவைக்கப்படுமா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை.

மேலும் செய்திகள்