முக்கிய செய்திகள்:
பா.ஜனதா-காங். தலைவர்களுக்கு சானியா கண்டனம்

தெலுங்கானா மாநிலத்தின் தூதராக 27 வயதான டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அவருக்கு ரூ.1 கோடி ஊக்கத் தொகையையும் தெலுங்கானா அரசு வழங்கியது. இதற்கு அந்த மாநில பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் கே.லட்சுமணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா சட்டசபை பா.ஜனதா தலைவரரான கே.லட்சுமணன் இதுபற்றி கூறுகையில், மகாராஷ்டிர மாநிலத்தில் பிறந்து ஐதராபாத்தில் குடியேறியவர் சானியா மிர்சா. எனவே, அவர் உள்ளூர்காரர் இல்லை. மேலும் அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்ததால் பாகிஸ்தானின் மருமகள் என்றார்.

சானியா இந்த கவுரவத்தை பெறுவதற்கு தகுதியானவர் இல்லை என்று தெலுங்கானா காங்கிரசும் தெரிவித்துள்ளது.

இந்த சர்ச்சையால் அதிர்ச்சியடைந்த சானியா மிர்சா, தன்னை வெளிநபராக சித்தரிக்க முயற்சிப்பதை கண்டித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் என் குடும்பம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஐதராபாத்தில் வசித்து வருகிறது. என்னை வெளியூர்காரர் என்று யாராவது கூற முயன்றால் அதனை வன்மையாக கண்டிக்கிறேன். என்னை தெலுங்கானா தூதராக நியமித்த இந்த சிறிய பிரச்சினைக்காக முன்னணி அரசியல் தலைவர்கள் மற்றும் ஊடகங்கள் அதிக நேரத்தை வீணாக்குவது என்னை மிகவும் காயப்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த சோயிப் மாலிக்கை திருமணம் செய்துள்ளேன். ஆனால் நான் இந்திய குடிமகள். என் ஆயுள் வரை இந்தியக் குடிமகளாகவே இருப்பேன் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்