முக்கிய செய்திகள்:
தி.மு.க. நெருக்கடி கொடுத்தது உண்மைதான் : பரத்வாஜ் பேட்டி

நீதிபதி அசோக்குமாருக்கு பதவி நீடிப்பு வழங்க தி.மு.க. நெருக்கடி கொடுத்தது உண்மைதான் என்று முன்னாள் சட்ட மந்திரி பரத்வாஜ் கூறினார். இந்திய பிரஸ் கவுன்சில் தலைவரும் ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜூ கடந்த 2004–ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்தார்.

அப்போது லஞ்சப் புகாரில் சிக்கிய நீதிபதி ஒருவருக்கு ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதியாக பதவி உயர்வு கொடுக்கப்பட்டதாகவும், பின்னர் அவரது பதவி காலம் முடிந்த பிறகும், மேலும் ஒரு வருடத்துக்கு பதவி நீடிப்பு வழங்கப்பட்டதாகவும் மார்க்கண்டேய கட்ஜூ ஒரு கட்டுரையில் தெரிவித்து இருந்தார்.

இதற்காக அப்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு தமிழகத்தைச் சேர்ந்த ஒரு அரசியல் கட்சி கடும் நெருக்கடி கொடுத்ததாகவும், அந்த நீதிபதிக்கு பதவி நீடிப்பு வழங்காவிட்டால் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வோம் என்று கூறி அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கை நிர்ப்பந்தப்படுத்தியதாகவும் கட்ஜூ தனது கட்டுரையில் எழுதி இருந்தார்.

இந்த குற்றச்சாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாராளுமன்றத்திலும் இது எதிரொலித்தது. பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இப்பிரச்சினையை அ.தி.மு.க. எழுப்பியது. கட்ஜூ தெரிவித்த கருத்து பற்றி விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சபையில் இருந்தார். அவர் பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.

காங்கிரஸ் சார்பில் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. தற்போதைய பா.ஜனதா அரசும் தனது கருத்தை தெரிவிக்கவில்லை.

ஆனால் 2004–ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசில் சட்ட மந்திரியாக இருந்துவரும், கர்நாடக முன்னாள் கவர்னருமான எச்.ஆர்.பரத்வாஜ் கூறுகையில், நீதிபதி விஷயத்தில் காங்கிரஸ் அரசுக்கு தி.மு.க. நெருக்கடி கொடுத்தது உண்மைதான் என்று ஓப்புக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக எச்.ஆர்.பரத்வாஜ் சி.என்.என். ஐ.பி.என். தொலைக்காட்சிக்கு அளித்த போட்டியில் கூறியிருப்பதாவது:–

சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதியாக இருந்த அசோக்குமாருக்கு, 1 ஆண்டு பதவி நீடிப்பு வழங்க அப்போதைய மத்திய அரசுக்கு காங்கிரசின் முக்கிய கூட்டணி கட்சியான தி.மு.க. நெருக்கடி கொடுத்தது உண்மைதான். மத்திய அரசு நெருக்கடிக்கு பணிந்து நடைமுறைகளை பின்பற்றாமல் அவருக்கு 1 ஆண்டு பதவி நீடிப்பு வழங்கியது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்