முக்கிய செய்திகள்:
டெல்லி சட்டசபை கலைக்க ஆம் ஆத்மி வலியுறுத்தல்

டெல்லியில் ஆட்சியமைக்க பா.ஜனதா முயற்சி செய்து வரும் நிலையில், சட்டசபையை உடனே கலைக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தி உள்ளது.

ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 24 பேரும் கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் இன்று துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்கை சந்தித்துப் பேசினர். அப்போது, எம்.எல்.ஏ.க்களை இழுப்பதற்காக நடக்கும் குதிரை பேரத்தை தடுக்க உடனடியாக சட்டசபையை கலைத்துவிட்டு புதிய தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். 25 நிமிடம் இந்த சந்திப்பு நீடித்தது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் நஜீப் ஜங், முழு நிலைமையை கணித்து, பிற கட்சிகளிடம் ஆலோசனை நடத்தி குடியரசுத் தலைவருக்கு விரிவான அறிக்கையை அனுப்ப உள்ளதாக கூறினார்.

பா.ஜனதா கட்சியிடம் ஆலோசனை நடத்துவதற்காக கவர்னர் அழைப்பார். அப்போது ஆட்சியமைக்க அக்கட்சி விருப்பம் தெரிவித்தால் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பட்டியலை கேட்பார் என்று கெஜ்ரிவால் தெரிவித்தார்.

பா.ஜனதாவிடம் 32 எம்.எல்.ஏ.க்கள் இருந்தபோது ஏன் ஆட்சியமைக்க வில்லை? என்று கேள்வி எழுப்பிய மணிஷ் சிசோடியா, இப்போது 29 எம்.எல்.ஏ.க்களே கைவசம் உள்ள நிலையில் எப்படி ஆட்சியமைக்கும்? என்றும் கேட்டுள்ளார்.

மேலும் செய்திகள்