முக்கிய செய்திகள்:
இனி வரும் காலங்களில் ஓட்டு வங்கி அரசியல் காணாமல் போய்விடும் : நஜ்மா ஹெப்துல்லா

அனைத்து மக்களுக்குமான முன்னேற்றம் என்ற இலக்கை நோக்கி பயணிக்கும் மோடி தலைமையிலான ஆட்சியில் பா.ஜ.க. மீதான முஸ்லிம்களின் நம்பிக்கை அதிகரித்து வருகிறது என சிறுபான்மை விவகாரங்கள் துறைக்கான மத்திய மந்திரி நஜ்மா ஹெப்துல்லா கூறியுள்ளார்.ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த நஜ்மா ஹெப்துல்லா கூறியதாவது:-

நாட்டின் வளர்ச்சி என்ற மோடியின் பிரசாரத்தை நம்பி கடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்த முஸ்லிம்கள், அந்த வளர்ச்சியில் நாட்டில் உள்ள ஒட்டுமொத்த சிறுபான்மையினரும், முஸ்லிம்களும் உள்ளடங்கி இருப்பதை எண்ணி பா.ஜ.க. மீதான முஸ்லிம்களின் நம்பிக்கை அதிகரித்து வருகிறது.

கடந்த தேர்தலில் 100 சதவீதம் முஸ்லிம்களுமே பா.ஜ.க.வுக்கு வாக்களித்தனர் என்று கூறி விட முடியாது. ஆனால், அவர்களின் நம்பிக்கையும் முன்னேற்றமும் அதிகரிக்க, அதிகரிக்க - பா.ஜ.க.வுக்கு அவர்கள் அளிக்கும் வாக்கும் மெல்ல, மெல்ல அதிகரிக்கும்.முந்தைய அரசுகள் எல்லாம் சிறுபான்மையின மக்களின் நலனுக்காக எதுவுமே செய்யாமல் வெறும் வார்த்தை ஜாலம் மட்டுமே காட்டி வந்துள்ளன. அவை சிறுபான்மையின மக்களின் மேம்பாட்டுக்கான வழிகளைப் பற்றி அக்கறை காட்டவில்லை என்பதை சச்சார் கமிட்டி அறிக்கை வெட்டவெளிச்சாமக சுட்டிக் காட்டியுள்ளது.

அனைத்து மக்களையும் உள்ளடக்கிய நாட்டின் முன்னேற்றம் என்ற குறிக்கோளை நோக்கிச் செல்ல பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இனி வரும் காலங்களில் ஓட்டு வங்கி அரசியல் என்பது காணாமல் போய்விடும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

 

மேலும் செய்திகள்