முக்கிய செய்திகள்:
டெல்லியில் காவிரி நடுவர் மன்றம் கூடியது

டெல்லியில் காவிரி நடுவர் மன்றம் 7 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கூடியது.

தமிழகம், கர்நாடகம் இடையேயான காவிரி நதி நீர்ப்பிரச்சினையை தீர்ப்பதற்காக கடந்த 1990–ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.தமிழகத்துக்கு 205 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும் என்று 1991–ல் இடைக்கால உத்தரவு வழங்கியது. அதன் பிறகு 2007–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5–ந்தேதி இறுதித்தீர்ப்பை வழங்கியது.

அதில் தமிழ்நாட்டுக்கு காவிரியில் 419 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டது. இதில் கர்நாடகத்தில் இருந்து பெற வேண்டிய நீரின் அளவு 192 டி.எம்.சி.தான். மீதம் உள்ள 227 டி.எம்.சி. நீர் தமிழகத்தில் உள்ள நீர்ப் பிடிப்பு பகுதிகளில் இருந்து பெறக்கூடியவை ஆகும். இதில் புதுவைக்கு 7 டி.எம்.சி. நீரை தமிழகம் வழங்க வேண்டும்.

நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் கேரள அரசுகள் நடுவர் மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளன. மேலும் இந்தப் பிரச்சினை தொடர்பாக 3 மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளதால் நடுவர் மன்றத்தில் விசாரணை நடத்த முடியாது என்று அப்போது நடுவர் மன்ற தலைவராக இருந்த நீதிபதி என்.பி.சிங் கூறினார். இதனால் 7 ஆண்டுகளாக மனுக்கள் விசா ரிக்கப்படாமல் நிலுவையில் இருந்தது.

இதற்கிடையே நடுவர் மன்ற தலைவராக இருந்த என்.பி.சிங் 2012–ம் ஆண்டு ராஜினாமா செய்தார். அதன் பிறகு அவருக்கு பதில் ஓய்வு பெற்ற சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி பி.எஸ்.சவுகான் கடந்த மே மாதம் நடுவர் மன்ற தலைவராக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து 7 ஆண்டுகளுக்கு பிறகு காவிரி நடுவர் மன்றம் இன்று நீதிபதி பி.எஸ்.சவுகான் தலைமையில் கூடியது. இதில் தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி, கேரளா ஆகிய 4 மாநிலங்களின் அரசு பிரதி நிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழகம், கர்நாடகம், கேரள அரசுகளின் முறையீடு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

 

மேலும் செய்திகள்