முக்கிய செய்திகள்:
கேரளாவில் கனமழை: 4 பேர் பலி

கேரளாவில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் 1–ந் தேதி தென்மேற்கு பருவமழை பெய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஒரு வாரம் தாமதமாக 6–ந் தேதி பருவ மழை தொடங்கியது.

அதன்பின்பும் மழை எதிர்பார்த்தபடி பெய்யவில்லை. கடந்த ஆண்டை காட்டிலும் 40 சதவீதம் அளவுக்கு குறைவாகவே மழை பெய்திருந்தது. என்றாலும் அதிகாரிகள் இனி வரும் நாட்களில் பருவ மழை பெய்யும் என்று நம்பினர். அதற்கேற்ப கேரளாவில் நேற்று முன்தினம் முதல் பலத்த மழை கொட்டி வருகிறது.குறிப்பாக வட கேரள பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதில் கோழிக்கோடு, ஆலுவா, சங்கனாச்சேரி, எர்ணாகுளம், வயநாடு, மலபார், ஆலப்புழா ஆகிய பகுதிகளில் மழை விடிய விடிய கொட்டி தீர்த்தது.

தொடர்மழை காரணமாக கோழிக்கோடு மாவட்டம் அதிக அளவு பாதிப்புக்கு ஆளானது. இங்கு 40–க்கும் அதிகமான வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன. ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.வீடுகள் இடிந்தும், வெள்ளத்தில் சிக்கியும் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த ஜானகி (56) என்ற பெண் பரிதாபமாக இறந்தார். கொடஞ்சேரியை சேர்ந்த காட்சன் (9) என்ற சிறுவன் வெள்ளத்தில் மூழ்கி பரிதாபமாக பலியானான். திருவம்பாடியை சேர்ந்த ஹரிதாசன் நாயர் என்பவர் சுவர் இடிந்து விழுந்து இறந்தார்.

இது போல மழை நேரத்தில் பழுதான மின்வயரை சரிசெய்ய சென்ற மின்வாரிய ஊழியர் பாபுராஜ் என்பவரும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.இவர்களை தவிர காசர்கோடு பகுதியை சேர்ந்த 2 பேரை காட்டாற்று வெள்ளம் அடித்து சென்றது. அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. தீயணைப்பு படையினர் அவர்களை தேடி வருகிறார்கள்.

மலையோர கிராமங்களில் சில இடங்களில் நில சரிவும் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இதில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.எர்ணாகுளம் பகுதியில் பெய்த கன மழை காரணமாக தண்டவாளத்தில் பாறாங்கற்கள் விழுந்தன. ரெயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று கற்களை அகற்றி பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் சுமார் 6 மணி நேரம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தற்போது பெய்து வரும் மழை மேலும் 24 மணி நேரத்திற்கு நீடிக்கும் என திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும் கேரள கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் எனவும், இதன் காரணமாக கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் எனவும் எச்சரித்து உள்ளனர்.

எனவே மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அவர்கள் அறிவித்து உள்ளனர்.

 

மேலும் செய்திகள்