முக்கிய செய்திகள்:
எதிர்க்கட்சி தலைவர் விவகாரத்தை காங்கிரஸ் அரசியலாக்ககூடாது: வெங்கையா

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 44 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. அந்த கட்சி, இப்போது எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெறுவதற்காக போராடி வருகிறது.543 எம்.பி.க்களை கொண்ட பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவியைப் பெறுவதற்கு ஒரு கட்சி குறைந்தபட்சம் 10 சதவீத இடங்களைப் பெற வேண்டும். அந்த வகையில் 55 இடங்களை காங்கிரஸ் கட்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால் 11 இடங்களை குறைவாக பெற்றுள்ளது.

இருப்பினும் தங்கள் கட்சிக்கே எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்க வேண்டும் என்று சபாநாயகர் சுமித்ரா மகாஜனை காங்கிரஸ் மக்களவை கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தலைமை கொறடா ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆகியோர் நேரில் சந்தித்து சமீபத்தில் வலியுறுத்தினர்.ஒரு வேளை எதிர்க்கட்சி தலைவர் பதவியை தங்களுக்கு தராவிட்டால் நீதி கேட்டு கோர்ட்டுக்கு செல்ல காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இப்பிரச்னையை காங்கிரஸ் கட்சி அரசியலாக்கக் கூடாது என வெங்கையா நாயுடு இன்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், நேற்று வரை தங்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வேண்டும் என்று சபாநாயகரை கேட்காத காங்கிரஸ் கட்சி, தொடர்ந்து இது நாள் வரை அரசை குறைகூறுவதிலேயே கவனமாக இருந்துள்ளது. நேற்று முன்தினம் தான் காங்கிரஸ் கட்சியினர் எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். இதிலிருந்தே அவர்கள் இப்பிரச்னையில் அரசியல் செய்கிறார்கள் என்று தெளிவாக தெரிகிறது.

ஆனால் இவ்வாறு பழிபோடுவதெல்லாம் அவர்களுக்கு எந்த வகையிலும் உதவாது. அதை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். நேரு காலத்திலும், இந்திரா காலத்திலும், ராஜீவ் காலத்திலும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் யாரும் இருந்ததில்லை என்பதை அவர்கள் உணரவேண்டும் என்று வெங்கையா கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்