முக்கிய செய்திகள்:
வழக்குகளின் தேக்கத்திற்கு காரணம் என்ன? மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கம்

புதுடில்லி:'மத்திய, மாநில அரசுகளின் சட்டங்கள் அதிகரித்து உள்ளது, நீதிபதி பணியிடங்கள் காலியாக இருப்பது போன்றவையே, நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில், மூன்று கோடிக்கும் மேலான வழக்குகள் தேக்கமடைய காரணம்,' என, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

லோக்சபாவில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு, அவர் எழுத்து மூலமாக அளித்த பதில்:
கடந்த, மே 1ம் தேதி நிலவரப்படி, உச்ச நீதிமன்றத்தில், 64 ஆயிரம் வழக்குகளும், 2013ம் ஆண்டின் இறுதி நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள, 24 உயர் நீதிமன்றங்களில், 44.62 லட்சம் வழக்குகளும், கீழ் நீதிமன்றங்களில், 2.68 கோடிவழக்குகளும் நிலுவையில் உள்ளன. நிலுவையில் உள்ள, மொத்த வழக்குகளின் எண்ணிக்கை, 3.13 கோடி.மொத்தமுள்ள, 24 உயர் நீதிமன்றங்களில், அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை, 906.

ஆனால், தற்போது, 636 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர்; 270 பணியிடங்கள் காலியாக உள்ளன.மத்திய, மாநில அரசுகள் அதிக அளவில் சட்டங்களை இயற்றி உள்ளன. நீதிமன்றங்களில், அப்பீல் மனுக்களும், அதிக அளவில் தாக்கல் செய்யப்படுகின்றன. அத்துடன், நீதிபதிகள் பணியிடங்கள், நிரப்பப்படாமல் காலியாக உள்ளன, ரிட் மனுக்கள் எண்ணிக்கை அதிகரிப்பு போன்றவையே, நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில், வழக்குகள் அதிக அளவில் தேக்கமடைய காரணம்.இவ்வாறு, ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

மேலும் செய்திகள்