முக்கிய செய்திகள்:
கிராம மக்களுக்கு ராணுவப்பயிற்சி: மத்திய அரசு

நாட்டின் புதிய பிரதமர் நரேந்திர மோடி, அண்டை நாடுகளுடன் நட்புறவுடனும் அதே சமயம் அவர்களுக்குத் தாழ்ந்தவர்களாக இல்லாமல் சமமாக விளங்கவேண்டும் என்ற கொள்கையையும் மத்திய அரசு கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதனைப் பின்பற்றும் விதமாக இந்திய-சீன எல்லையில் வாழும் மக்களுக்கு ராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் வடகிழக்கு எல்லைப்பகுதி, ஜம்மு-காஷ்மீர் எல்லைகளில் மேற்கொள்ளப்படும் லஞ்ச ஒழிப்பு மற்றும் பாதுகாப்பு கண்காணிப்பில் மக்களையும் ஒருங்கிணைக்க அரசு முடிவு செய்துள்ளது.

ஆயுதப் பயிற்சி உட்பட துணை ராணுவ மட்டத்தில் மக்களுக்குப் பயிற்சி அளித்தால் அவசரகாலங்களில் இவர்கள் அரசுக்கு உதவ வாய்ப்புள்ளதாக உள்துறை அமைச்சகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. லடாக்கில் உள்ள பங்காங் ஏரிப்பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்ய முயன்றதைத் தொடர்ந்து, சில நாட்களிலேயே இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சாதாரண நாட்களிலும் எல்லைப்புறப் பகுதிகளில் எதிரிகளின் இயக்கத்தை அங்கு வாழும் மக்கள் தொடர்ந்து கண்காணிக்க முடியும் என்பதால் மக்கள் குடியேற்றம் எல்லைப்பகுதிகளில் அதிகரிக்கப்படவேண்டும். உலகம் முழுவதிலும் உள்ள பல நாடுகளில் மக்கள் எல்லைப்புறங்களில் குடியேறுவது ஊக்குவிக்கப்படுகின்றது. இந்தியாவில் தான் உணர்ச்சிபூர்வமான விஷயமாக கருதி இம்முயற்சி தடுக்கப்படுகின்றது என்று மூத்த உள்துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக் பகுதிகளில், இவ்வாறு மக்கள் குடியேறுவது அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு பாதுகாப்பு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. இந்திய-நேபாள் எல்லையில் உள்ள வடக்கு அஸ்ஸாம், வடக்கு வங்காளம், உத்தரப்பிரதேச மலைப்பகுதிகள், ஹிமாச்சலப் பிரதேசம், லடாக் போன்ற பல பகுதிகளிலும் இத்திட்டம் கடந்த 1963லிருந்து வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது என்று அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்