முக்கிய செய்திகள்:
பாஜக எம்பிக்களுக்கு அத்வானி வேண்டுகோள்

டெல்லியை அடுத்துள்ள சூரஜ்குந்த் நகரில் பா.ஜனதாவின் புதிய எம்.பி.க்களுக்கான 2 நாள் பயிலரங்கம் நடந்தது. இதில் பாராளுமன்ற மற்றும் டெல்லி மேல்-சபைக்கு முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட 150-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். முகாமில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் எம்.பி.க்கள் நடந்து கொள்ளும் விதம் குறித்து அவர்களுக்கு விளக்கப்பட்டது.

முதல் நாள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசும்போது, எம்.பி.க்கள் பொது வாழ்வில் தூய்மையை கடைபிடிக்கவேண்டும் என்றும், எம்.பி.க்கள் தங்களுக்குள்ளான பிரச்சினைகளை பொது இடங்களில் பேசக் கூடாது எனவும் அறிவுரை வழங்கினார். பயிலரங்கத்தின் 2-ம் நாளான நேற்று மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல், பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

இந்த பயிலரங்கத்தில் நேற்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுரேஷ் சோனி கலந்து கொண்டு பேசும்போது, ‘‘மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்து விடாமல் அவர்களது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுங்கள்’’ என்றார்.

பயிலரங்கத்தில் பா.ஜனதாவின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி நிறைவு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:-

நீங்கள் அனைவரும் அரசாங்கத்தின் முகங்கள் என்பதோடு பிரதமர் மற்றும் மந்திரிகளது முகங்கள் என்பதையும் மறந்து விடக்கூடாது. நாம் அனைவரும் அரசின் பிரதிநிதிகளாக இருக்கிறோம். ஏனென்றால் இப்போது நாம் ஆளும் கட்சி எம்.பி.க்கள். எனவே, எவ்வித சர்ச்சைகளிலும் நீங்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது. அதே போல் தவறான நடத்தைகளிலும் ஈடுபடக்கூடாது. உங்கள் தொகுதியின் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் மிகுந்த நெருக்கம் வைத்துக் கொள்ளுங்கள். கட்சியின் அமைப்புகளுடனும், கீழ்மட்ட அளவிலும் வலிமையான உறவை ஏற்படுத்திக் கொண்டால்தான் உங்களுக்கு மாநிலத்திலும், தொகுதியிலும் நல்ல பெயர் கிடைக்கும்.

இதுவரை நான் சந்தித்த பாராளுமன்றங்களிலேயே 16-வது பாராளுமன்றம்தான் மிக வித்தியாசமானது. ஏனென்றால் இந்த பாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து கூட கிடையாது. இதனால் பா.ஜனதாவின் புதிய எம்.பி.க்களுக்கு மட்டும் அல்ல, கட்சியின் எம்.பி.க்கள் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. ஏனெனில் நாம் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் எப்படி செயல்படுகிறோம் என்பதை ஊடகத்துறையினரும், அரசியல் நோக்கர்களும் மிக உன்னிப்பாக கவனிப்பார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக சில கடினமான முடிவுகளை எடுக்கப் போவதாக கூறி இருக்கிறார். எனவே, அத்தகைய முடிவுகள் ஏன் எடுக்கப்பட்டன என்பதையும் அதனால் நாட்டுக்கு எதிர்காலத்தில் என்ன நன்மை என்பதையும் சாதாரண மக்களிடம் நாம் தெளிவாக எடுத்துக் கூறவேண்டும்.

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஏ.கே.அந்தோணி அண்மையில், காங்கிரஸ் கட்சி தனது மதச் சார்பற்ற கொள்கைக்காக சிறுபான்மையினர் பக்கம் சரிந்ததால், காங்கிரசில் இருந்த பெரும்பான்மையினர் கட்சிக்கு அன்னியமாகி போய்விட்டனர் என்று கூறியிருப்பதை பாராட்டுகிறேன். அவரது நிலையை மற்ற காங்கிரஸ் தலைவர்களும் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்