முக்கிய செய்திகள்:
ஜம்மு-காஷ்மீர் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 4-ம் தேதி ஒருநாள் பயணமாக ஜம்மு-காஷ்மீருக்கு செல்கிறார். பிரதமர் பதவியேற்ற பிறகு அவர் அங்கு முதல் முறையாக செல்வதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜூலை 4-ம் தேதி ஜம்மு அருகே உள்ள கத்ரா நகரில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொண்டு, கத்தா-உதம்பூர் ரெயில் பாதையில் (25 கிமீ) ரெயில் சேவையை மோடி திறந்து வைக்கிறார். ரெயில்வே மந்திரி சதானந்த கவுடா, பிரதமர் அலுவலக இணை மந்திரி ஜிதேந்திர சிங் ஆகியோரும் மோடியுடன் செல்கின்றனர்.

புகழ்பெற்ற வைஷ்ணவி தேவி கோவிலின் அடிவாரத்தில் உள்ள நகரம் கத்ரா. அங்கு ரெயில் நிலையம் செயல்பாட்டிற்கு வந்த பின்னர், பக்தர்கள் கத்ரா நகருக்கு ரெயில் மூலம் எளிதாக வந்தடைய முடியும்.

ரெயில் பாதை திறப்பு விழாவைத் தொடர்ந்து ஸ்ரீநகர் செல்லும் பிரதமர் மோடி, பதாமி பாக் ராணுவ தலைமையகத்தில் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார். இந்த கூட்டத்தில் கவர்னர் வோரா, முதல்வர் உமர் அப்துல்லா, ராணுவ தலைமை கமாண்டர் ஹூடா மற்றும் அதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள்.

பின்னர் கவர்னர் அளிக்கும் மதிய விருந்தில் கலந்துகொள்ளும் மோடி, ஊரி நகரில் நீர்மின் திட்டத்தையும் தொடங்கி வைக்க திட்டமிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்