முக்கிய செய்திகள்:
எம்.பி.களிடம் மோடி பேச்சு

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு முதன் முறையாக பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.களுக்கு இரு நாள் பயிற்சி முகாம் இன்று தொடங்கியது. தலைநகர் டெல்லி மற்றும் சண்டிகர் இடையே சூரஜ்கண்டில் உள்ள ஓட்டலில், இந்த இரண்டு நாள் பயிற்சி முகாமை பாரதப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இதில் கலந்து கொண்டு பேசிய மோடி, நானும் முதன் முறை எம்.பி. தான். நானும் பிரதமர் அலுவலகத்தில் பயிற்சி பெறுகிறேன் என்று எம்.பி.க்களிக்களிடம் கூறினார். எம்.பி.க்கள் எதை செய்யவேண்டும், எதை செய்யக்கூடாது என நூற்றுக்கும் மேற்பட்ட அறிவுரைகளை கூறிய அவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதற்கான நடத்தையும், நல்லொழுக்கத்தையும் கண்டிப்பாக பின்பற்றவேண்டும் என வலியுறுத்தினார்.

எம்.பி.க்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் எப்போதும் தன்னை தொடர்பு கொள்ளலாம் என அப்போது அவர் தெரிவித்தார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அக்கட்சியின் 161 எம்.பி.க்களுக்கு, இப்பயிற்சி வகுப்பில் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது குறித்து வெங்கைய்ய நாயுடுவும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றி அருண் ஜெட்லியும், சமூக ஊடகங்களை எப்படி பயனுள்ள வகையில் பயன்படுத்தவேண்டும் என்று பியூஷ் கோயலும் பயிற்சி அளிக்கின்றனர்.

இறுதியாக பா.ஜ.க.வின் மூத்த உறுப்பினரான எல்.கே. அத்வானி உரையாற்றி பயிற்சியை முடித்து வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்