முக்கிய செய்திகள்:
பீகாரில் காவல்துறை அதிகாரிக்கு மரண தண்டனை

பீகார் மாநிலத்தில் போலி என்கவுன்ட்டரில் மாணவர்கள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், காவல்துறை அதிகாரிக்கு மரண தண்டனை விதித்து பாட்னா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. காவல்துறையைச் சேர்ந்த மேலும் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாட்னாவில் உள்ள அஷியானா நகரில் கடந்த 2002 ஆம் ஆண்டு 3 இளைஞர்கள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் இவர்களுக்கு தொடர்பு இருந்ததாகவும், கொள்ளையர்களான இவர்கள், STD பூத் ஒன்றில் ரகளை செய்தபோது, காவல்துறையினருடன் ஏற்பட்ட மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அந்த இளைஞர்கள் பொது தொலைபேசி நிலையத்திற்கு பணத்தைச் செலுத்த சென்றதாகவும், அவர்களுக்கு எந்த விதத்திலும் சமூகவிரோதச் செயல்களில் தொடர்பு இல்லை என்றும் உறவினர்கள் தெரிவித்தனர். எனவே இதுகுறித்து நியாயமான விசாரணை தேவை என போராட்டங்கள் நடைபெற்றன.

இதனால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. வழக்கு விசாரணை பாட்னா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி திரு. ரவிசங்கர் சின்ஹா நேற்று தீர்ப்பளித்தார்.

குற்றம்சாட்டப்பட்டவர்களில் பாட்னாவில் உள்ள சாஸ்திரிநகர் காவல்நிலைய அதிகாரியான ஷாம்ஸ் அலாம் என்பவருக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். தலைமைக் காவலர் அருண்குமார் சிங் உட்பட குற்றம் சாட்டப்பட்ட மற்ற 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் 33 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன.

மேலும் செய்திகள்