முக்கிய செய்திகள்:
காவல்துறையிடம் ப்ரீத்தி ஜிந்தா வாக்குமூலம்

பிரபல ஹிந்தி திரைப்பட நடிகை பிரீத்தி ஜிந்தாவிடம், தொழிலதிபர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில், ப்ரீத்தி ஜிந்தா, காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையே கடந்த மே 30-ம் தேதி, மும்பை வான்கடே மைதானத்தில் போட்டி நடைபெற்றது. அப்போது, தொழிலதிபரும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் சக பங்குதாரரான நெஸ் வாடியா, பாலியல் ரீதியில் தன்னை அச்சுறுத்தியதாகவும், மோசமான வார்த்தைகளால் திட்டியதாகவும், அந்த அணியின் மற்றொரு பங்குதாரரான நடிகை ப்ரீத்தி ஜிந்தா போலீசில் புகார் அளித்திருந்தார். எனினும், அவரிடம் உடனடியாக இதுபற்றிய வாக்குமூலத்தை பெற முடியாத நிலையில், அவர் வெளிநாடு சென்றுவிட்டதால் விசாரணையில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், நடிகை பிரீத்தி ஜிந்தா நேற்று தாயகம் திரும்பியதைத் தொடர்ந்து, மும்பை போலீசார், அவரை வான்கடே மைதானத்திற்கு வரவழைத்து, சம்பவம் நடந்த இடத்திலேயே, விவரங்கள் கேட்டு வாக்குமூலம் பதிவு செய்தனர். 2 மணி நேரம் நடைபெற்ற இந்தப் பதிவின்போது, நடந்த நிகழ்ச்சிகளை அவர் அப்படியே விளக்கிக் கூறினார். இதனைத் தொடர்ந்து, நெஸ் வாடியாவிடமும் வாக்குமூலம் பெற்று அதன் அடிப்படையில், குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவை ஏற்படும் பட்சத்தில், இன்றும் ப்ரீத்தி ஜிந்தாவிடம் வாக்குமூலம் பெறப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்