முக்கிய செய்திகள்:
சுவிஸ் அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை: ஜேட்லி

சுவிஸ் வங்கிகளில் கருப்புப் பணம் பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் பட்டியலை அளிக்க தயாராக இருப்பதாக, அந்நாட்டு அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இதுவரை வரவில்லை என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

மேலும், கருப்புப் பணம் பதுக்கிய இந்தியர்கள் விவரங்களை அளிக்குமாறு சுவிஸ் அரசுக்கு முறைப்படி இன்று கோரிக்கை கடிதம் அனுப்பவுள்ளதாகவும் தெரிவித்தார்.

சுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் இந்தியர்களின் பட்டியலை அந்த நாட்டு அரசு தயார் செய்து வருகிறது.அந்த பட்டியல் இந்திய அரசிடம் தரப்படும் என்று சுவிட்சர்லாந்து அரசின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

இது தொடர்பாக இன்று டெல்லியில் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது அவர், "பல்வேறு ஊடகங்களில் இந்தச் செய்தி வெளியாகிவருகிறது. இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் கிடைக்கவில்லை. இருப்பினும் சுவிட்சர்லாந்து அரசுக்கு இன்று முறைப்படி கடிதம் அனுப்பவுள்ளோம்" என்றார்.

சுவிட்சர்லாந்தின் மத்திய வங்கியான சுவிஸ் நேஷனல் பேங்க் அண்மையில் வெளியிட்ட புள்ளிவிவரத்தில், சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் ரூ.14,000 கோடியாக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

மேலும் செய்திகள்