முக்கிய செய்திகள்:
ரயில் கட்டணம் உயர்வு

ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

”புதிய ரயில் கட்டணங்கள் ஜூன் 25ஆம் தேதி நடைமுறைக்கு வருகிறது. முந்தைய அரசின் இடைக்கால பட்ஜெட்டின் படி இந்த கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தக் கட்டண உயர்வை நடைமுறைக்குக் கொண்டு வரா விட்டால் ரயில்வே அமைச்சகத்தின் ஆண்டுச் செலவினங்களைச் சந்திப்பதில் சிரமம் ஏற்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

ரயில்வே துறைக்கான இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை. ஆனால் டீசல் விலை உயர்வை பொறுத்து கட்டணத்தை உயர்த்திக்கொள்ள ரயில்வே நிர்வாகத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.அதன்படி, ஏப்ரல் மாதம் முதல், பயணிகள் மற்றும் சரக்கு கட்டணம் உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அந்த நேரத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் கட்டணம் உயர்த்தப்படவில்லை.

தேர்தல் முடிவுகள் கடந்த மே 16-ம் தேதி வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து பயணிகள் கட்டணம் 14.2 சதவீதமும் சரக்கு கட்டணம் 6.5 சதவீதமும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த கட்டண உயர்வு மே 20 முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது.

கட்டண உயர்வு குறித்து புதிய அரசு முடிவு செய்யும் என அப்போதைய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்தார்.இதன் தொடர்ச்சியாக, மத்தியில் புதிதாக பதவியேற்றுள்ள பாஜக அரசில் கர்நாடகத்தைச் சேர்ந்த சதானந்த கவுடா ரயில்வே அமைச்சராகப் பொறுப்பேற்றார். ரயில் கட்டணம் உயர்த்தப்படும் என மறைமுகமாகத் தெரிவித்து வந்தார். ரயில் கட்டண உயர்வு குறித்து பிரதமர் மோடியுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்